ஐக்கிய அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை நடந்த உலகக் கோப்பையின் மூன்றாமிடத்துக்கான போட்டி, ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோல் மழையாக மாறியுள்ளது. பிரான்ஸின் அசுரத்தனமான பதிலடி ஆட்டத்தை இறுதிவரை போராடி முறியடித்த இங்கிலாந்து 6-4 என்ற க…
ஐக்கிய அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை நடந்த உலகக் கோப்பையின் மூன்றாமிடத்துக்கான போட்டி, ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோல் மழையாக மாறியுள்ளது. பிரான்ஸின் அசுரத்தனமான பதிலடி ஆட்டத்தை இறுதிவரை போராடி முறியடித்த இங்கிலாந்து 6-4 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்று, 1966-ஆம் ஆண்டு சம்பியன் பட்டத்திற்குப் பிறகு உலகக் கிண்ண வரலாற்றில் தங்களது மிகச்சிறந்த முத்திரையைப் பதித்துள்ளது.
முதல் பாதியில் இங்கிலாந்தின் ருத்ர தாண்டவம்
அரையிறுதித் தோல்வியின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தோமஸ் துஷெலின் இங்கிலாந்து போட்டி தொடங்கிய 3ஆவது நிமிடத்திலேயே டெக்லான் றைஸ் அடித்த கோலால் கணக்கைத் தொடங்கியது. தொடர்ந்து 18-ஆவது நிமிடத்தில் எஸ்ரி கொன்ஸா தலையால் முட்டி கோல் அடித்தார்.
அதன்பின் புகாயோ ஸாகாவின் அசாத்திய ஆட்டம் தொடங்கியது. 37 மற்றும் 46ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை விளாசி, முதல் பாதியிலேயே இங்கிலாந்தை 4-0 என அசைக்க முடியாத பலத்திற்கு கொண்டு சென்றார்.
இரண்டாவது பாதியில் பிரான்ஸின் விஸ்வரூபம்
ஆனால், இரண்டாவது பாதியில் பிரான்ஸ் மரண மீள்வருகை கொடுத்தது. கிலியன் மப்பே 48 மற்றும் 66ஆவது நிமிடங்களில் இரட்டை கோல்களை அடித்த நிலையில், இடையே 54ஆவது நிமிடத்தில் பிராட்லி பார்கோலாவும் ஒரு கோல் அடிக்க, ஆட்டம் 4-3 என இங்கிலாந்திற்கு பயத்தை காட்டியது.
கடைசி நிமிட பரபரப்பும் பெல்லிங்ஹாமின் முத்திரையும்
போட்டியின் இறுதிப் பகுதியில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியபோது, 87ஆவது நிமிடத்தில் இங்கிலாந்திற்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஸாகா மிகக் கச்சிதமாக கோலாக மாற்றி தனது அபார ஹட்-ட்ரிக் சாதனையை முழுமையாக்கினார் (5-3). உடனே பிரான்ஸின் உஸ்மான் டெம்பிலி 4ஆவது கோலை அடித்து மீண்டும் மிரட்டினார்.
இருப்பினும் போட்டியின் கூடுதல் நேரத்தில் உள்ளே வந்த இங்கிலாந்தின் நட்சத்திர இளம் வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் தனது 7ஆவது தொடர் கோலை அடித்து பிரான்ஸின் கனவை முற்றிலுமாக தகர்த்தார்.

