திருகோணமலை உள்துறைமுக வீதியில் அமைந்துள்ள, இலங்கைத் துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான பழைய இறங்குதுறையில், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் சட்டரீதியான அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் திங்கட்கிழமை (20) காலை இடித்து அகற்றப்பட்டன. "பி…

திருகோணமலை உள்துறைமுக வீதியில் அமைந்துள்ள, இலங்கைத் துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான பழைய இறங்குதுறையில், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் சட்டரீதியான அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் திங்கட்கிழமை (20) காலை இடித்து அகற்றப்பட்டன.

"பியர் 1947 திருகோணமலை" (Pier 1947 Trincomalee) என்ற பெயரில், 2024-ஆம் ஆண்டு அப்போதைய கிழக்கு மாகாண ஆளுநரின் அனுமதியுடன் தனியார் ஒருவரால் இந்தக் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது.

கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதே, கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் தலையிட்டு, பணிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தது. எனினும், அந்த உத்தரவையும் மீறி கட்டுமானங்கள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, குறித்த கட்டுமானத்தை உடனடியாக அகற்றுமாறு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு எதிராக, கட்டுமானம் அமைத்தவர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். அவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது மனுதாரரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதன்படி, திணைக்களம் முன்னர் விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் ஏற்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, கட்டுமானம் அமைத்த தரப்பினரே முன்வந்து திங்கட்கிழமை (20)  காலை அந்தக் கட்டுமானத்தை இடித்து அகற்றியுள்ளனர்.

எஸ். கீதபொன்கலன்