பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் எனத் தங்களைக் காட்டிக்கொண்டு, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பல பகுதிகளில் மக்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள், பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட…

பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் எனத் தங்களைக் காட்டிக்கொண்டு, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பல பகுதிகளில் மக்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள், பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடுநுவர, தவுலகல பகுதியைச் சேர்ந்த 40, 44 மற்றும் 45 வயதுடைய மூவரும், பொலிஸ் அல்லது CID அதிகாரிகள் எனக் கூறி தனியாகச் சென்ற நபர்களையும் வாகனங்களையும் வழிமறித்து, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சோதனை நடத்துவது போல் நடித்து, அவர்களிடமிருந்த பணம் மற்றும் தங்க நகைகளை அபகரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், வீடுகளில் சோதனை நடத்துவது போல நடித்து, அங்கிருந்தவர்களை ஒரே இடத்தில் இருக்கச் செய்து, வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகளையும் கொள்ளையடித்துள்ளனர்.

2023ஆம் ஆண்டு முதல் பேராதனை, கண்டி, கொழும்பு, கிராண்ட்பாஸ், மாவனெல்லை, நாரம்மல, பிலிமத்தலாவை, தவுலகல, கம்பளை, கலஹா, கேகாலை மற்றும் கடுகன்னாவை உள்ளிட்ட பல பொலிஸ் பிரிவுகளில் இவர்கள் இந்த மோசடி மற்றும் கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பளை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான புலனாய்வின் அடிப்படையில், முதலில் பேராதனையில் ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து, ஏனைய இருவரும் பிலிமத்தலாவையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுக்கு அடிமையாக இருந்ததுடன், கொள்ளையடித்த பணத்தை போதைப்பொருள் பயன்பாட்டிற்காகவே செலவிட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் உருக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஒரு தொகை கண்டி பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து முச்சக்கரவண்டி ஒன்று, கத்தி, போதை மாத்திரைகள் மற்றும் உருக்கப்பட்ட தங்க நகைகள் உள்ளிட்ட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.