நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த சிறைச்சாலை பாதுகாவலர் டிலான் ஸ்ரீ அபேவர்தனவின் மனைவி திலினி தேவிகா, தனது கணவரின் இழப்பால் மீளாத்துயரில் கதறி வருகிறார். "இன்று என்னால் வீட்டிற்கு வர முடியாது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெரிய கலவரம் நடக்கிறது; அதனால் நா…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த சிறைச்சாலை பாதுகாவலர் டிலான் ஸ்ரீ அபேவர்தனவின் மனைவி திலினி தேவிகா, தனது கணவரின் இழப்பால் மீளாத்துயரில் கதறி வருகிறார்.

"இன்று என்னால் வீட்டிற்கு வர முடியாது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெரிய கலவரம் நடக்கிறது; அதனால் நான் அங்கு செல்கிறேன். போனை ஆஃப் செய்யாதீர்கள், நான் அங்கு சென்றவுடன் பேசுகிறேன் என்று கடைசியாக என்னிடம் கூறினார். அதன்பின் அவர் என்னுடன் பேசவில்லை. அதிகாலையில் சிறைச்சாலையில் கைதிகள் தாக்கியதில் சில அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. பின்னர், உயிரிழந்தவர்களின் பட்டியலில் எனது கணவரின் பெயரையும் பார்த்தேன்" என்று திலினி தேவிகா கண்ணீருடன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "குற்றவாளிகள் ஒன்றிணைந்து, தவறு செய்யாத அதிகாரிகள் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தி, சித்திரவதை செய்து கொன்றுள்ளனர். அவர்களது உடல்களைப் பார்த்தபோது, அவர்கள் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள் என்று என்னால் நினைக்க முடியவில்லை. எனது கணவர் ஒரு வீரன்; எனது பிள்ளைகளுக்குத் தந்தையை இழந்துவிட்டேன். தந்தையில்லாத பிள்ளைகளையும், கணவரை இழந்த வாழ்க்கையையும் எதிர்கொள்வது ஒரு பெரிய சவாலாகும். அந்தச் சவாலை என் கணவருக்காக நான் ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு இடமாற்றம் கிடைக்காததால், கடந்த 11 ஆண்டுகளாக வேலை முடிந்து பண்டாரவளைக்கு வந்து பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வார். அன்று காலை கூட எனக்கு போனில் பிள்ளைகளைக் காட்டச் சொன்னார்" என உருக்கமாகக் கூறினார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த அதிகாரிகளில் ஒருவரான டிலான் ஸ்ரீ அபேவர்தன (41), குருணாகலை, கொகிலகெதரவைச் சேர்ந்தவர். இவருக்கு 7 வயதில் ஒரு மகளும், 10 மாத கைக்குழந்தையும் உள்ளனர். இவரது மனைவி திலினி தேவிகா, பண்டாரவளை பாடசாலை ஒன்றில் நூலக உதவியாளராகப் பணியாற்றுகிறார்.

இவரது தாயார் ஏ.எம்.எஸ். தமயந்தி பெரேரா மற்றும் தந்தை ரஞ்சித் அபேவர்தன ஆகியோர், "டிலான், இலங்கை கடற்படையில் 12 ஆண்டுகள் பணியாற்றியவர். அதன் பின், கடந்த 5 ஆண்டுகளாக சிறைச்சாலைத் திணைக்களத்தில் பாதுகாவலராகப் பணிபுரிந்து வந்தார். மகன் இறந்ததற்காக நான் கவலைப்படவில்லை; தவறு செய்யாத எனது மகனை இப்படிப் படுகொலை செய்ததைக் கண்டுதான் நான் வருந்துகிறேன்" என்று கண்ணீர் மல்கக் கூறினர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிர்நீத்த டிலான் ஸ்ரீ அபேவர்தனவின் இறுதிக்கிரியைகள், 10 ஆம் திகதி வத்தேகெதர பொது மயானத்தில் அரச மரியாதையுடன் இடம்பெற்றன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கலவரங்கள் ஏற்படும் போது அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மேலதிக படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த அதிகாரிகள் தொடர்பிலான விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மோதலில் ஈடுபட்ட கைதிகள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் அரச உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.