10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய சுமார் 237 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் அங்கோலா நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரம்ப விசார…

10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய சுமார் 237 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் அங்கோலா நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்ப விசாரணைகளின்படி, குறித்த பெண் அங்கோலாவில் இருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா வழியாக கட்டாரின் தோஹா ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளார்.

விமான நிலையத்தில் சக்கர நாற்காலியின் உதவியுடன் பயணித்த அவரின் நடத்தை சந்தேகத்திற்கிடமாக இருந்ததை அடுத்து சுங்க அதிகாரிகள் மேலதிக சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன்போது, அவரிடம் இருந்த கொக்கேய்ன் அடங்கிய 14 காப்சியூல்கள் (Capsules) மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தனது உடலுக்குள் கூடுதல் காப்சியூல்கள் இருப்பதாகவும் அவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.