“நாடு முழுவதும் ஒன்றிணைந்த தேசிய நடவடிக்கை” திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஊடக சந்திப்பு இன்று (16) கொழும்பில் நடைபெற்றது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன மற்றும் இலங்கை சுங்கத்…
“நாடு முழுவதும் ஒன்றிணைந்த தேசிய நடவடிக்கை” திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஊடக சந்திப்பு இன்று (16) கொழும்பில் நடைபெற்றது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா ஆகியோர் இதில் கலந்துகொண்டு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து விளக்கமளித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன, முப்படையினர், பொலிஸார் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களம் இணைந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் கடந்த 8 மாதங்களில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் 230,248 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்த நடவடிக்கைகளின் போது எந்தவொரு நிரபராதி நபரும் அநியாயமாக கைது செய்யப்படக் கூடாது என்பதில் பொலிஸ் திணைக்களம் உறுதியாக இருப்பதாகவும், அதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவிக்கையில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் விமான நிலையம் மற்றும் தபால் சேவையை பயன்படுத்தி நாட்டிற்குள் கடத்த முயற்சிக்கப்பட்ட 13 போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக கூறினார்.
சிறிய அளவிலான போதைப்பொருட்கள் கூட தபால் மூலம் நாட்டிற்குள் நுழைவது சமூகத்தில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், அவற்றைத் தடுக்கும் வகையில் சுங்கத் திணைக்களம் தனது கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

