தற்போது பட்டம் விடும் பருவகாலம் என்பதால், நாட்டின் முக்கிய விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் விடுவது அதிகரித்துள்ளது. இது விமானங்களின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடு…
தற்போது பட்டம் விடும் பருவகாலம் என்பதால், நாட்டின் முக்கிய விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் விடுவது அதிகரித்துள்ளது.
இது விமானங்களின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவது உலகளவில் விமான விபத்துகளுக்கு முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், விமானச் செயல்பாடுகளுக்கு நேரடி தடையாகவும் அமைகிறது.
இலங்கையின் கட்டுநாயக்க, ரத்மலானை, ஹிங்குரகொட, சீனக்குடா, அனுராதபுரம், பலாலி, கட்டுக்குருந்த, கொக்கலை, வவுனியா, வீரவில, மட்டக்களப்பு மற்றும் மத்தள ஆகிய பகுதிகளில் உள்ள ஓடுபாதைகளைச் சுற்றி பட்டம் விடுவதால் அதிக அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆபத்தை உறுதிப்படுத்தும் வகையில், இன்று (2026.07.15) ரத்மலான விமான நிலையத்திலிருந்து பயிற்சிக்காகப் புறப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்று, பட்டம் விடும் நூலில் சிக்கி பெரும் ஆபத்தை எதிர்கொண்டது.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த விமானம் அவசரமாக மீண்டும் ரத்மலான விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப ஆய்வில், விமானத்தின் இடது சக்கரம், இடது எஞ்சின் பகுதி மற்றும் பல பாகங்களில் பட்டம் விடும் நூல்கள் கடுமையாகச் சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது.
பட்டம் விடும் நூல்கள் அல்லது அதன் பாகங்கள் விமானத்தின் எஞ்சினுக்குள் அல்லது இயக்க முறைமைக்குள் நுழைந்தால், விமானம் முழுவதற்கும் கடுமையான சேதம் ஏற்பட்டு, பெரும் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
எனவே, விமானப் பாதுகாப்பு மற்றும் பயணிகளின் உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில், விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் அத்தகைய பகுதிகளில் பட்டம் விடுவதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

