நாட்டில் வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண இன்று (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனை குறிப்பிட்டுள்ளார். இது த…

நாட்டில் வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண இன்று (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.புகையற்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை

2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், நாட்டில் புகையற்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெற்றிலை விற்பனையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்படவில்லை எனவும், மக்களை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பதே இதன் நோக்கம் எனவும் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வருடாந்தம் 1,750 முதல் 1,900 வரையான வாய் புற்றுநோய் நோயாளர்கள் பதிவாகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் சட்டத்தை மீறி வெற்றிலையுடன் புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதுவரை கலாசார காரணிகளை கருத்தில் கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டதாகவும், மக்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் இனி சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.