இலங்கையின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும்…

இலங்கையின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதிகாரிகள், இது தமக்குத் தாமே ஏற்படுத்திக்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், சம்பவத்தின் சூழ்நிலைகள் தொடர்பான அதிகாரப்பூர்வ விசாரணைகள் தொடர்கின்றன.

சி.டி. விக்ரமரத்ன 1986 ஆம் ஆண்டு உதவி பயிற்சி பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இணைந்ததுடன், 34 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து, அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதை அடுத்து, சி.டி. விக்ரமரத்ன பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து சுமார் ஒரு வருடமும் ஏழு மாதங்களும் அந்தப் பொறுப்பில் பணியாற்றிய அவர், பின்னர் இலங்கையின் 35ஆவது பொலிஸ் மா அதிபராக உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.

2023 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதியுடன் அவர் பொலிஸ் சேவையில் இருந்து உத்தியோகபூர்வமாக ஓய்வுபெற்றிருந்தார்.