முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச நாணய நிதிய (IMF) இணக்கப்பாட்டைத் தாண்டி, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீவிர வலதுசாரி நவதாராளவாத வேலைத்திட்டத்தைப் பின்பற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். பன்னல, தலம்மெஹெர பதிரண மண்டபத…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச நாணய நிதிய (IMF) இணக்கப்பாட்டைத் தாண்டி, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீவிர வலதுசாரி நவதாராளவாத வேலைத்திட்டத்தைப் பின்பற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். பன்னல, தலம்மெஹெர பதிரண மண்டபத்தில் திங்கட்கிழமை (13) அன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
IMF நிபந்தனைகள் குறித்த விமர்சனம்: "கடந்த தேர்தல் காலத்தில், நாட்டுக்குச் சுமையை ஏற்படுத்தும் IMF இணக்கப்பாட்டைத் திருத்துவோம் என தேசிய மக்கள் சக்தியும் நாங்களும் வாக்குறுதி அளித்தோம். ஆனால், இன்று ஆட்சியில் இருக்கும் அவர்கள் அனைத்தையும் மறந்து, ரணில் விக்ரமசிங்கவின் ஒப்பந்தத்தையும் தாண்டிச் சென்று, கடுமையான வரிச் சுமைகளை மக்கள் மீது சுமத்தி வருகின்றனர். IMF ஒப்பந்தத்தின்படி முதன்மைக் கணக்கு (Primary Account) 2.3% ஆக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இந்த அரசாங்கம் அதனை 5.4% ஆக உயர்த்தியுள்ளது. அரசாங்க வருமானம் 13.9% ஆக இருக்க வேண்டிய இடத்தில், 15.4% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் மீது வரி விதித்தும், அரசாங்கத்தின் மூலதனச் செலவினங்களைக் குறைத்துமே இவர்கள் இந்த இலக்குகளை அடைந்துள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் செல்லப் பிள்ளையாக மாறி, மக்களை ஒடுக்கும் தேவையே இவர்களுக்கு உள்ளது" என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
ஜனநாயகம் மற்றும் நீதித்துறை மீதான அழுத்தம்: அரசாங்கம் எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயற்சிப்பதுடன், சுயாதீன நீதித்துறை மீது முறையற்ற செல்வாக்கைச் செலுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். "அன்று பொய்களாலும் மோசடிகளாலும் மக்களை ஏமாற்றியவர்கள், இன்று ஜனநாயகத்தின் தூணான நீதித்துறையைக் கைப்பாவையாக மாற்ற முற்படுகின்றனர். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிகளில் வெற்றிடங்கள் இருந்தும் அவற்றை நிரப்பாமல் இருப்பதும், நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க முனைவதும் இதற்குச் சான்றாகும்" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
விவசாயிகளின் துயரம்: விவசாயிகள் நெல்லுக்கு நிலையான விலையைக் கோரி வீதிக்கு இறங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், "தேர்தல் காலத்தில் நெல்லுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலை தருவோம் என்றவர்கள், இன்று 120 ரூபாயையே வழங்குகின்றனர். விவசாய அமைச்சரே ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய 137 ரூபாய் செலவாகிறது என்று ஒப்புக்கொண்டுள்ளார். இதன் மூலம் ஒரு கிலோ நெல்லுக்கு விவசாயிக்கு 17 ரூபாய் நஷ்டத்தை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது" என்று கவலை தெரிவித்தார்.
கல்வி மற்றும் முதலீட்டுச் சிக்கல்கள்: கல்வி முறையில் மாற்றம் கொண்டுவருவதாகக் கூறி, வரலாற்றுப் பாடத்தின் முக்கியத்துவத்தை அரசாங்கம் குறைத்துவிட்டது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலக் கல்வி கூட மாணவர்களுக்குச் சரியான முறையில் சென்றடையவில்லை. மேலும், நாட்டில் முறையான முதலீடுகள் இல்லை என்றும், அன்று ஆடைத் தொழிற்சாலைகளைத் தீக்கிரையாக்கத் தூண்டியவர்களே இன்று ஆட்சியில் இருப்பதால், தற்போதுள்ள தொழிற்சாலைகளும் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும் சஜித் பிரேமதாச தனது உரையில் எச்சரித்தார்.
இறுதியாக, வறுமைக் கோட்டைக்கூட இன்னும் சரியாக அடையாளம் காண முடியாத, எல்லாவற்றையும் குழப்பிக்கொண்டிருக்கும் ஒரு ‘எல் போர்ட்’ (L Board) அரசாங்கமாகவே இது திகழ்கிறது என அவர் விமர்சித்தார்.

