இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான தேவா அலோசியஸின் 25ஆவது திரைப்படமான ‘சாவடி’ திரைப்படத்தின் வெற்றிகரமான 300ஆவது நாள் கொண்டாட்டமும், படக்குழுவினருக்கான விருது வழங்கல் விழாவும், புதிய திரைப்படமான ‘துவக்கு’ படத்தின் வெளியீட்டு விழாவும் அண்மையில் மட்டக்களப்பு தாழங்குடா பி.சி.ஏ…
இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான தேவா அலோசியஸின் 25ஆவது திரைப்படமான ‘சாவடி’ திரைப்படத்தின் வெற்றிகரமான 300ஆவது நாள் கொண்டாட்டமும், படக்குழுவினருக்கான விருது வழங்கல் விழாவும், புதிய திரைப்படமான ‘துவக்கு’ படத்தின் வெளியீட்டு விழாவும் அண்மையில் மட்டக்களப்பு தாழங்குடா பி.சி.ஏ. திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், திரைப்பட இறக்குமதியாளரும் சங்கவி தியேட்டர்ஸ் மற்றும் சங்கவி ஃபிலிம்ஸ் நிறுவனங்களின் தலைவருமான துரைராசா சுரேஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தேவா சினி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான ‘சாவடி’ திரைப்படம், இலங்கையில் 16 திரையரங்குகளில் வெளியிடப்பட்டதுடன், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு இதுவரை 143 சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனையைப் பாராட்டும் வகையில், திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அதேவேளை, தேவா அலோசியஸ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய முழுநீள திரைப்படமான ‘துவக்கு’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீடும் இந்நிகழ்வில் இடம்பெற்றது.
திரையுலக பிரபலங்கள், கலைஞர்கள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் திரைப்பட ரசிகர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

