சைபர் குற்றச் சம்பவம் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது – சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி முக்கிய விடயங்கள் அமெரிக்கா – ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊக்கமளிப்பதாக இருந்தாலும், இலங்கைப் பொருளாதாரத்தின் எதிர்கால வாய்ப்…

சைபர் குற்றச் சம்பவம் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது – சர்வதேச நாணய நிதியத்தின்  வதிவிடப் பிரதிநிதி

முக்கிய விடயங்கள்

அமெரிக்கா – ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊக்கமளிப்பதாக இருந்தாலும், இலங்கைப்  பொருளாதாரத்தின் எதிர்கால வாய்ப்பிற்கான சரிவு அபாயங்கள் இன்னும் தொடர்கின்றன. எரிசக்திக்கான செலவு-மீட்பு விலையிடலை (Cost-recovery pricing) பேணுவது  விரிவாக்கப்பட்ட நிதி வசதி நிகழ்ச்சித்திட்டத்தில் முழுவதும்  முக்கிய தேவையொன்றாக இருக்கும். NDB வங்கியின் மோசடிச் சம்பவம் ஊழியரின் தவறான நடத்தையால் உருவானது, ஆனால் போதிய உள்ளக மற்றும் வெளிவாரி கட்டுப்பாடுகள் இல்லாததால் அது சரியான நேரத்தில் கண்டறியப்படவில்லை.

கெலும் பண்டார

பொருளாதாரம் மற்றும் மத்திய கிழக்கு போரின் தாக்கம் குறித்து டெய்லி மிரர் (Daily Mirror) எழுப்பிய கேள்விகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வதிவிடப் பிரதிநிதி மார்த்தா டெஸ்ஃபாயே வோல்டெமிக்கேல் (Martha Tesfaye Woldemichael) பதிலளிக்கிறார்.

நேர்காணல்:

கேள்வி 1: இலங்கை மீதான மத்திய கிழக்குப் போரின் தாக்கம் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?

பதில்: மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் இலங்கைக்கு ஒரு முக்கிய வெளிநாட்டு அதிர்வாகும். ஏனெனில் இலங்கையின் பெற்றோலிய இறக்குமதிகளில் ஏறத்தாழ பாதியும்,வெளிநாட்டு பணவனுப்பல்களில் சுமார் 40 சதவீதமும் மத்திய கிழக்கிலிருந்தே கிடைக்கின்றன. மேலும்,  இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் விமானங்களில் மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமானவை மத்திய கிழக்கு வழியாகவே வருகின்றன. எனவே, போர் வெடித்து அந்த அதிர்வு இலங்கை பொருளாதாரத்தைத் தாக்கியபோது, அதன் பாதிப்புகள் உடனடியாகத் தெரிந்தன: எரிபொருள் விலைகள் உயர்ந்தன, சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது, பணவீக்கம் அதிகரித்தது.

அ ண்மையில்  ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது ஊக்கமளிக்கின்றதொரு படிமுறையாகக் காணப்படுகின்ற வேளையில் தோற்றப்பாட்டிற்கான கீழ்நோக்கிய இடர்நேர்க்வுகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன. ஆறுதல் தரும் விடயம் என்னவென்றால், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே பலவீனமான நிலையில் இருந்து இலங்கை இந்த அதிர்வினை எதிர்கொள்ளவில்லை என்பதாகும். வலுவான அரசிறை மற்றும் வெளிநாட்டு நிலைமைகள் உட்பட, அதிகாரிகளின் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் கடினமாக வென்றெடுக்கப்பட்ட நன்மைகள் குறிப்பாக, எரிபொருள், மின்சாரம், உரம் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான தற்காலிக, வரவுசெலவுத் திட்டத்திற்குட்பட்ட நிவாரணப் பொதியை வழங்தல்  ஊடாக அவற்றிற்கு விரைவாகப் பதிலிறுத்துவதற்கு இடமளித்துள்ளன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சீர்திருத்தத்தின் மூலம் கட்டியெழுப்பப்படும் பொருளாதாரத் தாக்குப்பிடிக்குந்தன்மை அதிர்வுகள் ஏற்படும் போது பலன் தருகிறது.

கேள்வி 2: உலகளாவிய அதிர்வுகள் காரணமாக சர்வதேச நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டத்தில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார இலக்குகளை இலங்கை எட்டுவது கடினமாக இருக்கும். இந்தச் சூழ்நிலைகளில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் என்ன?

பதில்: சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டமானது அதிர்வுகளைத்  தளர்வடையச்செய்யும் விதத்தில் உள்ளமைக்கப்பட்ட நெகிழ்ச்சித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் சூழ்நிலைகள் மாறும்போது, இறுக்கமான இலக்குகளை இலங்கை பேண வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கேட்கவில்லை. உதாரணமாக, தற்போது நிறைவடைந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின் கீழ், 'டித்வா' புயலினைத் தொடர்ந்து ஏற்பட்ட மீட்பு மற்றும் புனரமைப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, 2026 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப மீதி இலக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதத்திலிருந்து 1.4 சதவீதமாக தளர்த்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் அதிகாரிகளுடன் ஒப்புக்கொண்டது. அதேபோல், மத்திய கிழக்கு போரினால் ஒதுக்குத் திரட்டலில் ஏற்பட்ட மெதுவடைதலைப் பிரதிபலிக்கும் வகையில், தேறிய  பன்னாட்டு ஒதுக்குகள் மீதான அடிப்படை அளவை நாம்  குறைத்தோம்.

இங்கு முக்கியமானது என்னவென்றால், அரசிறை மற்றும் படுகடன் நிலைபெறுதன்மையை மீட்டெடுப்பதில் இதுவரை ஏற்பட்டுள்ள சிறந்த முன்னேற்றத்தையும் ஆபத்திற்கு  இட்டுச்செல்லாமல் அதிர்வுகளுக்குப் எதிர்வினையாற்றுவதாகும். அதனால்தான் எந்தவொரு அரசிறை ஆதரவும் நன்கு இலக்கிடப்பட்டு, கவனமாக செலவு மதிப்பிடப்பட்டு, காலவரையறைக்கு உட்பட்டதாக இருப்பது மிகவும் முக்கியம். உதாரணமாக, மத்திய கிழக்கு நிவாரணப் பொதி ரூ. 100 பில்லியனாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அது 2026 செப்டம்பரில் முடிவடைகிறது. முக்கியமாக, அதிர்வுகள் நிறைந்த சூழலில் உள்ள பாதிப்படையக்கூடியதன்மைகளைக் கருத்தில் கொண்டு, 2027 ஆம் ஆண்டிலிருந்து அடிப்படையிலிருந்த  2.3 சதவீத ஆரம்ப மீதி இலக்கிற்குத் திரும்பலடையச்செய்வதற்கு அதிகாரிகள் இணங்கிக்கொண்டுள்ளனர். அதற்கான வாய்ப்புக்கள் உள்ளன, ஆனால் கடினமாகப் பெற்ற சீர்திருத்த நன்மைகளைப் பாதுகாப்பதற்கு அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும்.

கேள்வி 3 மற்றும் 4: அத்தியாவசியமற்ற இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் கருத்து என்ன? வாகன இறக்குமதியால் ஏற்படும் டொலர் வெளியேற்றம் ரூபாயின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த போதிலும், அது அரசிறைக்கு ஊக்கமளிப்பதாக இருப்பதால், இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிப்பது அறிவுறுத்தத்தக்கவையா?

பதில்: மோட்டார் வாகன இறக்குமதிகள்,  உயர்வடைந்த கேள்வியின் காரணமாக 2025 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8 சதவீதம் கொண்ட கணிசமான வரி வருவாயை உருவாக்கி, 2025 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவீத ஆரம்ப மிகையொன்றினை இலங்கை அடைய உதவிதுடன் இது விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்ட இலக்கைவிட நன்கு மேலாகக் காணப்பட்டது. மோட்டார் வாகனங்களுக்கான கேள்வி 2026 ஆம் ஆண்டிற்குள் குறையும் என்று எறிவுசெய்யப்படுகின்ற வேளையில் அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைத் தாமதப்படுத்தவும், டொலருக்கான கேள்வியைக் குறைக்கவும், வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்குகளைப் பாதுகாப்பதற்குமான முயற்சியொன்றாக அண்மையில் அதிகாரிகள் சில மோட்டார் வாகனங்களுக்கான சுங்கத் தீர்வையை 30 இலிருந்து 45 சதவீதமாக அதிகரித்தனர். எவ்வாறாயினும், இந்நடவடிக்கை இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீதான மொத்த வரிச் சுமையை அதிகரிப்பதுடன், வர்த்தக வரிகள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. மேலும் இது, சென்மதி நிலுவை காரணங்களுக்காக இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிக்கவோ அல்லது தீவிரப்படுத்தவோ கூடாது என்ற விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உள்ள தொடர்ச்சியான உறுதிப்பாட்டிற்கு எதிரானது.

இறக்குமதிக் கட்டுப்பாடுகள் குறுகிய காலத்தில் சென்மதி நிலுவை அழுத்தத்தைத் தணிக்க உதவக்கூடும் என்றாலும், சீர்திருத்தங்கள் மற்றும் பேரண்டப்பொருளாதார சீராக்கலுக்கு மாற்றாக அவை இருக்க முடியாது. செலாவணி வீதம் அதிர்வினைத் தாங்கும் காரணியாக அதன் பங்கை ஆற்ற அனுமதிப்பதே எமது  பரிந்துரையாகும்.

கேள்வி 5: சர்வதேச நாணய நிதியத்தினை அணுகி ஒப்பந்தங்களைச் செய்துகொண்ட மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் முன்னேற்றத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: அண்மையில்  நிறைவுசெய்யப்பட்ட ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின் கீழ், விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் இலங்கையின் செயலாற்றம் பொதுவாக வலுவானதாக இருப்பதாக நாம்  மதிப்பிட்டுள்ளோம். எண்களே உண்மையைச் சொல்கின்றன. 2022 இல் ஏற்பட்ட  ஆழமான சுருக்கத்திற்குப் பின்னர் , 2025 இல் பொருளாதார வளர்ச்சி 5.0 சதவீதமாக மீண்டெழுந்தது; 2026 இன் முதல் காலாண்டில் பதிவான 5.1 சதவீத வளர்ச்சியும் எதிர்பார்ப்புகளை விஞ்சிக் காணப்பட்டது. நெருக்கடியின் போது கிட்டத்தட்ட 70 சதவீதமாக உயர்ந்த பணவீக்கம், 2026 மே மாதத்தில் 5.5 சதவீதமாக ஆண்டுக்கு ஆண்டு குறைவடைந்தது. நெருக்கடியின் போது முற்றாகக் குறைந்திருந்த மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் மே மாத இறுதியில் ஐ.அ.டொலர் 6.9 பில்லியனாக உயர்ந்தன. வரி அரசிறை 2025 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.4 சதவீதத்தை எட்டியது. இது கடந்த தசாப்தத்தில் மிக உயர்ந்த அளவாகும்.  ஆரம்ப மிகை நிகழ்ச்சித்திட்ட இலக்குகளை கணிசமாக விஞ்சிக் காணப்பட்டது. படுகடன் மறுசீரமைப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது, பொதுப் படுகடன் 2022 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 125.8 சதவீதத்திலிருந்து 2025 இல் 101.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இவை சிறிய சாதனைகள் அல்ல. பணவீக்கத்தை உறுதிநிலைப்படுத்தவும், ஒதுக்குகளை மீண்டும் கட்டியெழுப்பவும், இறை ஒழுக்கவியலினை மீட்டெடுக்கவும் பல நாடுகள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றன. இலங்கை இந்த மூன்றையும் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்ட காலத்திற்குள்ளேயே செய்து முடித்துள்ளது. நிச்சயமாக, சவால்கள் இன்னும் உள்ளன. மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் இன்னும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். கட்டமைப்புச் சீர்திருத்தங்களுக்குத் தொடர்ச்சியான உத்வேகம் தேவைப்படுகிறது. பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டினை அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்திலும் நீடித்த முன்னேற்றங்களாக மாற்றுவதற்கு வர்த்தகம், தொழிலாளர் சந்தைகள் மற்றும் வியாபாரச் சூழல் போன்ற துறைகளில் ஆழமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, உறுதிப்பாட்டிலிருந்து வளர்ச்சியை நோக்கி நகர்வதே இனிவரும் பணியாகும்.

கேள்வி 6: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து : சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடு என்ன?

பதில்: உண்மையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதன் ஐ.அ.டொலர் 175 மில்லியன் பன்னாட்டு முறி மறுசீரமைப்பை இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்ட பிரமாணங்களுக்கு இணங்க நிறைவு செய்தது. அதன் தொழிற்பாட்ரீதியான வளம்பெறத்தக்கதன்மையை மீட்டெடுப்பதற்கான நடுத்தர கால உபாயத் திட்டத்தையும் அதிகாரிகள் செயற்படுத்தி வருகின்றனர். மிக அண்மையில் , ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்பு என்பவற்றை மேற்கொள்வதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது. விமான நிறுவனத்தின் ஐந்தொகையினை வலுப்படுத்தவும் வணிகச் செயற்பாட்டை மேம்படுத்தவும் அதன் மறுசீரமைப்பை விரைவுபடுத்துவது திறைசேரிக்கு ஏற்படும் அரசிறை சார்ந்த இடர்நேர்வுகளைக் குறைப்பதற்கு முக்கியமானதாகும்.

பொதுவாகக் கூறின், அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் நட்டத்தையோ அல்லது படுகடனையோ திரட்டுவதைத் தவிர்க்கும் வகையில் முன்மதியுடன் நிர்வகிக்கப்படுவது இன்றியமையாதது. ஏனெனில் அந்த நட்டங்கள் இறுதியில் வரி செலுத்துவோரால் செலுத்த வேண்டியிருக்கும். இதனால்தான் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான செலவு-மீட்பு விலையிடலுக்கு நாம்  நெருக்கமான அவதானம் செலுத்துகிறோம். அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிக் கடன்பெறுகைகள் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்தும் நாம்  உன்னிப்பாகக் கவனிக்கிறோம்: அடுத்த ஆண்டின் ஜூன் இறுதிக்குள் 52 பெரிய அளவிலான அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகள்

கணக்காய்வு செய்யப்பட்ட நிதியியல் அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்று நாம்  கோருகிறோம். இதேபோல், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறுந்தன்மையையும் ஆளுகையினையும் வலுப்படுத்துவதற்காக ஒரு புதிய அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் சட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.

கேள்வி 7: தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டால், படுகடன் தீர்ப்பனவு தொடங்குவதற்கு முன்னதாக ஒதுக்குகளை எதிர்பார்த்த மட்டத்திற்கு உயர்த்துவது இலங்கைக்கு எவ்வளவு சவாலானதாக இருக்கும்?

பதில்: 2022 ஆம் ஆண்டின் குறைவான மட்டங்களிலிருந்து இலங்கை நீண்ட தூரம் வந்துள்ளது, 2026 மே மாத இறுதியில் மொத்த பன்னாட்டு ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 6.9 பில்லியனை எட்டியுள்ளன. மத்திய கிழக்கு போர் இந்த முயற்சியைச் சிக்கலாக்கியுள்ளது. அதிக எண்ணெய் விலைகள் இறக்குமதிச் செலவை அதிகரிக்கின்றன, மேலும் குறைந்த சுற்றுலாத்துறைப் பெறுகைகள் வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களை பலவீனப்படுத்துகின்றன. ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின் கீழ் இந்த சவால்களை நாம்  அங்கீகரிக்கிறோம், அங்கு நாம்  பலவீனமான சென்மதி நிலுவைத் தோற்றப்பாட்டையும் மெதுவான ஒதுக்குத் திரட்சியினையும் எதிர்வுகூறுகின்றோம். சுருக்கமாகச் சொன்னால், முன்னைய மீளாய்வுடன் ஒப்பிடும்போது எமது  மொத்த பன்னாட்டு ஒதுக்கு எதிர்வுகூறல்களை நாம்  திருத்தியுள்ளோம். முக்கியமாக, வெளிநாட்டு அதிர்விளுக்கு வசதியளிக்கும் வகையில் தேறிய பன்னாட்டு ஒதுக்கு மீதான நிகழ்ச்சித்திட்ட இலக்கை நாம்  தளர்த்தினோம்.

இனிவரும் காலத்தில் முக்கியமானது என்னவென்றால், மத்திய வங்கி உடனடி வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகள் மூலம் வெளிநாட்டுத் தாங்கியிருப்புக்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு திடசங்கற்பம் பூணுகின்ற வேளையில், ஒழுங்கற்ற சந்தை நிலைமைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட விற்பனையை மேற்கொள்ள வேண்டும். ஒதுக்குகள் குறையாமல் சந்தை சீராக இயங்குவதற்கு செலாவணி வீத நெகிழ்ச்சித்தன்மையைப் பேணுவது மிக முக்கியம். மேலும், எப்போதும் அரசிறை ஒழுக்கவியலைக் கடைப்பிடிப்பது, படுகடன் நிலைபெறுதன்மையை மீட்டெடுத்தல் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் சீர்திருத்தங்களைச் செயற்படுத்துதல் ஆகியவை கடினமாக வென்றெடுத்த நன்மைகளைப் பாதுகாக்க உதவும்.

கேள்வி 8: அடுத்த பகிர்ந்தளிப்பானது மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கான கண்டிப்பான செலவு-மீட்பு விலையிடலைப் பேணுவதோடு பெரிதும் பிணைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதிகரிக்கின்ற பயன்பாட்டுத்  தீர்வைகள் மீதான கடுமையான பொதுக் கோபத்தைக் கருத்தில் கொண்டு, இலக்கிப்பட்ட எரிசக்தி மானியங்களுக்கு ஏதேனும் நெகிழ்ச்சித்தன்மை உள்ளதா அல்லது முழுமையான சந்தை சார்ந்த விலையிடல் சூத்திரம் சமரசம்செய்ய முடியா​​ததொன்றா?

பதில்: மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கான செலவு-மீட்பு விலையிடலை மீட்டெடுப்பது ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை நிறைவு செய்வதற்கான ஒரு முக்கிய நிபந்தனையாக இருந்தது. வலுவுக்கான செலவு-மீட்பு விலையிடலை​ப் பேணுவது விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டம் முழுவதும் ஒரு முக்கிய தேவையாக இருக்கும். இது ஏன் அவசியம்? ஏனெனில் தேசிய மின்சார சபை மற்றும் சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்கும்போது, அந்த நட்டங்களை இறுதியாக வரி செலுத்துவோரே சுமக்க வேண்டியிருக்கும் — இது பெரும்பாலும் பொதுப் படுகடனை அதிகரிக்கும் கடன்பெறுகைகள் மூலமே நடக்கும். அவை வரவுசெலவுத் திட்டத்திலிருந்து வளங்களை உறிஞ்சி, சுகாதாரம், கல்வி மற்றும் உற்பத்தி முதலீடுகளுக்கான செலவிடலைக் குறைத்து சுமையாக மாறுகின்றன.

அதே நேரத்தில்,  எரிசக்திக்கான செலவு-மீட்பு விலையிடல் என்பது பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு ஆதரவளிப்பதோடு முரண்படவில்லை. விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், நெருக்கடிகள் மற்றும் கொள்கைச் சீராக்கல்களின் தாக்கத்திலிருந்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, சமூக பாதுகாப்பு வலையமைப்புக்களை வலுப்படுத்தவும் சமூக செலவிடலுக்கான அடிப்படை அளவைக் கடைப்பிடிக்கவும் அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு போருக்குப்  ஈடுகொடுக்கும் விதமாக வழங்கப்பட்ட நிவாரணப் பொதியின் ஒரு பகுதியாக, பயனாளிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அஸ்வெசும காசுப் பரிமாற்றக் கொடுப்பனவுகளை அதிகாரிகள் அதிகரித்தனர். சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலுக்கான எரிபொருள் மானியங்கள், சிறு விவசாயப் பண்ணைகளுக்கான உர மானியங்கள் மற்றும் மாதமொன்றிற்கு 180 அலகுகளுக்கும் குறைவாகப் பயன்படுத்தும் நுகர்வோருக்கான மின்சார மானியங்கள் என்பவற்றையும்  அவர்கள் நீடித்தனர். இனிவரும் காலத்தில், அரசிறை நிலைபெறுதன்மைக்கு ஆபத்து விளைவிக்காமல், படுகடன் நிலைபெறுதன்மையை மீட்டெடுக்கும் முயற்சிகளுக்குத் துணைபுரியும் விதத்தில், அல்லது சீர்திருத்தப் பாதையை தடம் புரளச் செய்யாமல், தற்காலிக, இலக்கிடப்பட்ட மற்றும் வரவுசெலவுத் திட்டத்திற்குட்பட்ட ஆதரவின் மூலம் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்கும் அதேவேளையில், எரிபொருள் விலைச் சீராக்கங்களுக்கு இடமளிக்க வேண்டியது அவசியமாகும்.

கேள்வி 9: அவுஸ்திரேலியாவிற்கான நாட்டுக்கான படுகடன் மீள்கொடுப்பனவு முறைமையான டிஜிட்டல் ஊடுருவல்கள் மூலம் இடைமறிக்கப்பட்ட புதிதாக நிறுவப்பட்ட பொதுப் படுகடன் முகாமைத்துவ அலுவலகத்தில் அண்மையில்  நடந்த ஐ.அ.டொலர் 2.5 மில்லியன் சைபர் திருட்டு இலங்கையின் அரசிறை உட்கட்டமைப்பில் உள்ள கடுமையான பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது. பொதுப் படுகடன் முகாமைத்துவ அலுவலகமானது குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்புச் சீர்திருத்தப் பொறுப்பாணையின் கீழ் உருவாக்கப்பட்டது என்பதைக் கருத்தில் கொண்டும், இந்தியாவிற்கான கொடுப்பனவுகளை இலக்குவைத்து இதுபோன்ற சைபர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக வெளிவந்துள்ள நிலையிலும், இந்த நிறுவன ரீதியான தோல்வியை சர்வதேச நாணய நிதியம் எவ்வாறு பார்க்கிறது?

பதில்: இச்சைபர் குற்றச் சம்பவம் இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வெளிநாட்டுப் படுகடன் செலுத்தப்படாததால், புதிய வெளிநாட்டுக் கொடுப்பனவு நிலுவைகளைத் தடுப்பது குறித்த தொடர்ச்சியான செயலாற்றப் பிரமாணம் நிறைவேற்றப்படவில்லை. இதன் விளைவாக, ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின் கீழ் தொகுதிகளைப் பெறுவதற்காக, தவறிய கொடுப்பனவுகளின் அளவு (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.002 சதவீதம்) மற்றும் சீராக்க நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு சிறிய அளவிலான மீறுகையின் அடிப்படையில் அடையத்தவறியமையினைத் தற்காலிகமாகத் தளர்த்துமாறு அதிகாரிகள் கோரினர். இதில் நிலுவைத் தொகையை விரைவில் தீர்ப்பது, ஜூன் இறுதிக்குள் பொதுப் படுகடன் முகாமைத்துவ அலுவலகத்திற்கான நிலையான தொழிற்பாட்டு நடைமுறைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் ஏனைவற்றிற்கிடையில், கணக்கு விவரங்கள் மற்றும் கொடுப்பனவுத் தொகைகளின் வலுவான உறுதிப்படுத்தலை எளிதாக்குவதற்கு ஆகஸ்ட் இறுதிக்குள் புதிய படுகடன் முகாமைத்துவத் தகவல்  முறைமையினைத் தொழிற்படுத்தல் ஆகியவை அடங்கும்.

ஏனைய அபிவிருத்திப் பங்காளர்களுடன் இணைந்து, தொழில்நுட்ப உதவி மூலம் பொதுப் படுகடன் முகாமைத்துவ அலுவலகத்தின்  இயலளவினைத் தொடர்ந்து வலுப்படுத்துவதில் சர்வதேச நாணய நிதியம் நெருக்கமாக ஈடுபட்டுள்ளது. அது நிறுவப்பட்டதிலிருந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, பொதுப் படுகடன் முகாமைத்துவ அலுவலகம் அதன் முதலாவது நடுத்தர காலப் படுகடன் உபாயம் மற்றும் வருடாந்த கடன்பெறுகைகள் திட்டம் என்பவற்றை வெளியிடுவதிலும் வாராந்த உள்நாட்டு முறி ஏலங்களை நடத்துவதிலும் முன்னேறி வருகிறது. முன்மதியுடைய படுகடன் முகாமைத்துவ நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும், உள்நாட்டுப் படுகடன் சந்தைகளை ஆழப்படுத்துவதற்கும், பன்னாட்டு மூலதனச் சந்தைகளுக்கான இலங்கை திரும்புவதற்கு ஆதரவளிப்பதற்கும் நிலையான இயலளவினைக் கட்டியெழுப்பல் முக்கியமானதாகும்.

கேள்வி 10: NDB வங்கியில் நடந்த மோசடியை சர்வதேச நாணய நிதியம் எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது?

பதில்: NDB வங்கியின் மோசடிச் சம்பவம் ஊழியரின் தவறான நடத்தையால் உருவானது, ஆனால் போதிய உள்ளக மற்றும் வெளிவாரிக்  கட்டுப்பாடுகள் போதியளவில் இல்லாமையினால் அது சரியான நேரத்தில் கண்டறியப்படவில்லை. இலங்கை மத்திய வங்கி இதற்கு உடனடியாகப் பதிலிறுத்தியது. வங்கியின் காசுப் பங்கிலாபப் பகிர்ந்தளிப்பினை நிறுத்தியதுடன், பரந்த வங்கித்தொழில் துறையின் மீதான நம்பிக்கைக்கு எவ்வித கசிவுத்தாக்கமும் ஏற்படுவதைத் தடுக்க முறைமைசார் திரவத்தன்மை ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தது. இந்தச் சம்பவம் குறித்த தடயவியல் கணக்காய்வொன்றும் தொடங்கப்பட்டுள்ளது.

மூலதனம் மற்றும் திரவத்தன்மை தொடர்பான அனைத்து ஒழுங்குமுறைத் தேவைகளையும் NDB தொடர்ந்து பூர்த்தி செய்கிறது என்ற இலங்கை மத்திய வங்கியின் மதிப்பீடு நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்ற வேளையில் நிதியியல் நேர்மை மற்றும் உறுதிப்பாட்டினைப் பாதுகாப்பதற்காகத் தொழிற்பாட்டு இடர்நேர்வுகள் மற்றும் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் இணங்குவிப்பு ஆகியவற்றின் மீதான இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையை வலுப்படுத்துவது முக்கியமானதாகும்.

கேள்வி 11: இந்த நெருக்கடியின் காரணமாக இலங்கையின் வறுமை மட்டம் மேலும் பாதிக்கப்படும். இலங்கை இதை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்?

பதில்: உலக வங்கியின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி, வறுமை கீழ்நோக்கிய போக்கொன்றில் உள்ளது. இது 2023 இல் 27.6 சதவீதத்திலிருந்து கடந்த ஆண்டு 22.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. குறுகிய காலத்தில், ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாப்பதற்குக் சமூக பாதுகாப்பு வலையமைப்புக்களை வலுப்படுத்துவது முக்கியம். அந்த வகையில், அரசாங்கத்தின் உபாயத்தின் மைற்கல்லொன்றாக அஸ்வெசும காசுப் பரிமாற்றத் நிகழ்ச்சித்திட்டம் உள்ளது: அதன் உள்ளடக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் சுற்று பயனாளிகள் உள்வாங்கப்படுகின்ற வேளையில் ஆதரவு தேவைப்படுபவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக சமூகப் பதிவேடு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதிர்வுகளின் தாக்கத்திலிருந்து பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக அஸ்வெசும உள்ளது. உதாரணமாக, 'டித்வா' புயலுக்குப் பதிலிறுத்தும் விதமாக, அதிகாரிகள் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான நன்மைகளை ஆறு மாதங்களுக்கு நீடித்தனர். மத்திய கிழக்கு போரின் எதிர்மறைத் தாக்கத்தைத் தணிக்க, அவர்கள் ஏப்ரல் மாதத்தில் பயனாளிகளுக்கு கூடுதல் பண உதவி வழங்கினர்.

ஆனால் வெறும் பரிமாற்றங்கள் மட்டுமே ஒரு நாட்டை வறுமையிலிருந்து மீட்காது – வளர்ச்சியும் வேலைகளுமே அதைச் செய்யும். இதனால்தான் வலுப்படுத்தல் முக்கியமானது. திறன் பயிற்சி மற்றும் மானியங்கள் மூலமான வாழ்வாதார ஆதரவு அஸ்வெசும பயனாளிகள் தன்னம்பிக்கையுடன் தங்கள் சொந்தக் காலில் நிற்க உதவுகிறது. அதிகாரிகளின் 'பிரஜாசக்தி' முன்முயற்சி கிராமப்புற சமூகங்களை வலுவூட்டுவதையும் வறுமையை ஒழிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வறுமை விகிதங்களைக் குறைப்பதற்கு பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டினைப் பேணுவது ஒரு முன்நிபந்தனையாக இருக்கின்ற வேளையில், தாக்குப்பிடிக்குந்தன்மையினைக் கட்டியெழுப்புவதற்கும் வலுவான, நீடித்த மற்றும் அனைவரையுமுள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கும் சீர்திருத்த உத்வேகத்தை நிலைநிறுத்துவது அவசியமாகும்.