நீா்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கைதிகளின் மரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் 7 சிறை அதிகாரிகள் உட்பட சுமார் 28 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்…

நீா்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கைதிகளின் மரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் 7 சிறை அதிகாரிகள் உட்பட சுமார் 28 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளியாகும் அறிக்கைகள் குறித்து, சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பிரதி பிராந்திய பணிப்பாளர் பாபு ராம் பந்த் கவலை வெளியிட்டுள்ளார். இந்த மரணங்கள் மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட பிற கைதிகள் சித்திரவதை மற்றும் ஏனைய மோசமான நடத்தைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். இக்கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது. அனைத்து மரணங்கள் குறித்தும் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரியுள்ளார். அத்துடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கைதிகளின் நல்வாழ்வைச் சரிபார்க்க முழுமையான அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தடுப்புக் காவலில் உள்ள தங்களது நபர்களை சட்டத்தரணிகள் சந்திப்பதும், குடும்ப உறுப்பினர்கள் தங்களது அன்புக்குரியவர்களைப் பார்ப்பதும் மிக முக்கியமானது. மருத்துவ உதவி தேவைப்படும் எவருக்கும் தாமதமின்றி அது வழங்கப்பட வேண்டும் என பாபு ராம் பந்த் கோரியுள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்கள் குறித்து விசாரிக்க குழுவொன்று அமைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த விசாரணை நடுநிலையானதாகவும், சுதந்திரமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என்றும், மரணத்தை விளைவித்த பலப்பிரயோகத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் கண்டறியப்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்த சோகமான நிகழ்வு இலங்கையின் சிறைச்சாலை அமைப்பில் உள்ள நீண்டகாலப் பிரச்சினைகளை மீண்டும் சுட்டிக்காட்டுவதாக தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐநா துணைக் குழு (UN Subcommittee on Prevention of Torture), நீண்டகாலமாக நீடிக்கும் விசாரணைக்கு முந்தைய தடுப்புக் காவல், சிறைச்சாலைகளில் உள்ள அதிகளவிலான நெரிசல் மற்றும் போதிய வசதியின்மை குறித்து மீண்டும் எச்சரித்திருந்தது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் மேற்கொண்ட விஜயத்திற்குப் பிறகு, சிறை நிலைமைகளில் எந்தவொரு அர்த்தமுள்ள முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதையும் அவர்களது அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதிகாரிகள் தொடர்ந்து தவறிவருவது, சிறை வன்முறைகளுக்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதுடன் கைதிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.