திருகோணமலை துறைமுக வீதியில் இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான பழைய இறங்குதுறையில், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் முறையான அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 'பியர் 1947 திருகோணமலை' (Pier 1947 Trincomalee) என்ற தனியார் கட்டுமானங்கள் இன…

திருகோணமலை துறைமுக வீதியில் இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான பழைய இறங்குதுறையில், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் முறையான அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 'பியர் 1947 திருகோணமலை' (Pier 1947 Trincomalee) என்ற தனியார் கட்டுமானங்கள் இன்று (20) காலை இடித்து அகற்றப்பட்டன.

கடந்த 2024 ஆம் ஆண்டு, அப்போதைய கிழக்கு மாகாண ஆளுநரின் அனுமதியுடன் தனியார் ஒருவரால் இந்த கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது தலையிட்ட கரையோரப் பாதுகாப்பு திணைக்களம், குறித்த கட்டுமானப் பணிகளை நிறுத்தும்படி உத்தரவிட்ட போதிலும், அந்த உத்தரவை மீறி கட்டுமானங்கள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, குறித்த கட்டுமானத்தை உடனடியாக அகற்றுமாறு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உத்தரவிட்டிருந்தார்.

எனினும், இதற்கு எதிராகக் கட்டுமான உரிமையாளர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். குறித்த வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், மனுதாரரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களம் விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் சூழல் உருவானது.

இதனையடுத்து, இன்று காலை கட்டுமான உரிமையாளரின் தரப்பினராலேயே அந்த சட்டவிரோத கட்டுமானம் இடித்து அகற்றப்பட்டது.

எஸ்.கீதபொன்கலன்