சந்தையில் விற்பனை செய்யப்படும் சில வகை சவர்க்காரங்களின் லேபிள்களில் குறிப்பிட்ட தகவல்களை கட்டாயமாக குறிப்பிடும் வகையில், நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் க…

சந்தையில் விற்பனை செய்யப்படும் சில வகை சவர்க்காரங்களின் லேபிள்களில் குறிப்பிட்ட தகவல்களை கட்டாயமாக குறிப்பிடும் வகையில், நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவு, சவர்க்கார உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அனைவருக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சவர்க்காரத்தின் பெயர் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தடித்த எழுத்துக்களில் குறிப்பிடப்பட வேண்டும்.

அத்துடன், குறித்த சவர்க்காரத்தில் உள்ள மொத்த கொழுப்புப் பொருட்களின் அளவு சதவீதமாக (%) தெளிவாகவும் வெளிப்படையாகவும், 2 மில்லிமீற்றருக்குக் குறையாத அளவிலான தடித்த எழுத்துக்களில் அச்சிடப்பட வேண்டும் என புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒழுங்குவிதிகள் குழந்தைகளுக்கான சவர்க்காரம், உடல் பயன்பாட்டு சவர்க்காரம், முகச்சவர சவர்க்காரம், கார்போலிக் சவர்க்காரம், சலவைச் சவர்க்காரம், குளியல் கட்டி மற்றும் மென் சவர்க்காரம் உள்ளிட்ட பல்வேறு வகை சவர்க்காரங்களுக்கு பொருந்தும்.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதில் தலைவர் எஸ்.எம்.டீ. சூரியகுமாரவின் பரிந்துரைக்கு அமைய, இந்த புதிய ஒழுங்குவிதிகள் 2027 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.