செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் 39ஆவது நாளாக இன்று தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலும் 13 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் அருகருகே புதைக்கப்பட்டிருந்ததாக கருதப்படும் இரு சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் இடம்பெற்றுள்ளன. நீதி…
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் 39ஆவது நாளாக இன்று தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலும் 13 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் அருகருகே புதைக்கப்பட்டிருந்ததாக கருதப்படும் இரு சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் இடம்பெற்றுள்ளன.
நீதிமன்றத்தின் அனுமதியுடன் 56 நாட்கள் நடைபெறும் மூன்றாம் கட்ட அகழாய்வின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட இன்றைய பணிகளில், சில மனித எலும்புகள் குவியலாகக் காணப்பட்டதாக ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
சில எலும்புக்கூடுகள் மண்டையோடுகள் இன்றி காணப்பட்டதுடன், எலும்புகள் குவிந்திருந்த பகுதிகளில் தனித்தனியாக மண்டையோடுகளும் மீட்கப்பட்டுள்ளன. இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையா என்பது குறித்து தடயவியல் மற்றும் விஞ்ஞான ஆய்வுகள் நிறைவடைந்த பின்னரே உறுதியான தகவல்களை வெளியிட முடியும் என்று சட்டத்தரணி ஞா. ரனித்தா தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில், மூன்று சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட நான்கு எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களை உள்ளடக்கி இதுவரை 93 நாட்கள் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 467 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 444 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

