யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி இன்று (15) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் இந்த மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக மொத்தம் 56 நாட்கள் ஒது…
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி இன்று (15) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் இந்த மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக மொத்தம் 56 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை 32 நாட்கள் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 23ஆம் திகதியுடன் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
கடந்த ஆண்டு மே 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஒன்பது நாட்கள் நடைபெற்றதுடன், அதில் 19 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த ஆண்டு ஜூன் 26 முதல் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை 45 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், முதலாம் கட்டத்தில் கண்டறியப்பட்டவற்றையும் சேர்த்து மொத்தம் 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
மூன்றாம் கட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் பகுதிகள் கடந்த ஏப்ரல் 27 முதல் மே 9ஆம் திகதி வரையும், ஜூன் 1 முதல் ஜூன் 23ஆம் திகதி வரையும் நடைபெற்றன. இதில் மே மாதத்தில் மட்டும் 21 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இதுவரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் மொத்தம் 412 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 409 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

