ஆர்.எஃப்.எம். சுஹெல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அண்மைக்கால மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை தொகுதி அமைப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்ட அபீத ரத்நாயக்க, தனது அரசியல் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (11) வலப்பனையில் கோலாகலமாக நடைபெற…
ஆர்.எஃப்.எம். சுஹெல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அண்மைக்கால மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை தொகுதி அமைப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்ட அபீத ரத்நாயக்க, தனது அரசியல் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (11) வலப்பனையில் கோலாகலமாக நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவின் புதல்வரான அபீத ரத்நாயக்க, காவடி ஆட்டம் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்களின் பங்கேற்புடன் தனது அரசியல் பயணத்தை அதிரடியாக ஆரம்பித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.பி. ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், அக்கட்சியின் பதுளை மாவட்டத் தலைவர் தேனுக விதானபத்திரன, இரத்தினபுரி மாவட்டத் தலைவர் ஜானக வக்கும்புர மற்றும் கம்பஹா மாவட்டத் தலைவர் இந்திக அனுருத்த ஆகிய முன்னாள் அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
வலப்பனையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உரையாற்றிய சி.பி. ரத்நாயக்க, கூறியதாவது:
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார் என்பது அனைத்துக் கருத்துக்கணிப்பு அறிக்கைகளின் மூலமும் வெளிப்பட்டுள்ளது. நுவரெலியாவில் நாமல் ராஜபக்ஷவிற்குப் பலம் சேர்ப்பதற்காக, அபீத ரத்நாயக்கவை அரசியலில் மக்களிடம் ஒப்படைக்கும் நோக்கிலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது, கட்சிக்கு பலம் சேர்த்த நாமல் ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதியாக்குவதற்கான அலை நுவரெலியாவிலிருந்து ஆரம்பிக்கப்படும்.”
தொடர்ந்து உரையாற்றிய அவர், “நுவரெலியா மாவட்டத்திலிருந்து நான் கண்டிக்குச் சென்றிருந்தாலும், இன்றும் நுவரெலியா மாவட்டத்தின் தலைவர் நானே. அன்று எனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் போது, வலப்பனை கிராமத்தைக் கட்டியெழுப்புவதற்காக மக்களிடம் ஆணை கோரினேன். அந்த ஆணையின் மூலம் இன்று வரை இக்கிராமத்திற்கு என்னால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளேன். அன்று இருளில் மூழ்கிக் கிடந்த வலப்பனைக்கு இன்று மின்சாரம் வழங்கி, கல்வித் தரத்தை உயர்த்தி, வலப்பனை கிராமத்தை அபிவிருத்தி செய்துள்ளோம். அதேபோன்று பொதுமக்களின் பொருளாதாரம் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தேசிய அரசியலில் பங்களிக்க வேண்டிய ஒரு தருணத்திலும், நுவரெலியாவின் இளைஞர் பரம்பரையினரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டிய காலக்கட்டத்திலும், இன்று முதல் வலப்பனையின் பொறுப்பை அபீத ரத்நாயக்க எனும் இளம் தலைவரிடம் ஒப்படைக்கிறோம். இந்த இளம் தலைவருடன் இணைந்து எதிர்கால அரசியல் பயணத்தை முன்னெடுக்குமாறு நுவரெலியா மக்களுக்கு நான் மரியாதையுடன் அழைப்பு விடுக்கின்றேன். ஆரம்பம் முதல் இன்று வரை பொய்களை மட்டுமே கூறிவரும் தற்போதைய அரசாங்கத்திற்குப் பாடம் புகட்ட நுவரெலியா மக்கள் தயாராக இருக்கிறார்கள். இன்று நாம் தோற்றிருந்தாலும் நாளை வெற்றி பெறுவோம்” என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து சபையில் உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வலப்பனை தொகுதி புதிய அமைப்பாளர் அபீத ரத்நாயக்க,
“நவீன தலைமுறைக்குப் பொருத்தமான அரசியலை நாமல் ராஜபக்ஷவுடன் இணைந்து முன்னெடுக்க எதிர்பார்க்கிறேன். இப்பயணத்தில் எனது தந்தைக்கு வழங்கிய ஆதரவைப் போன்றதொரு ஆதரவை எனக்கும் வழங்குமாறு நுவரெலியா மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன். மேலும், எந்தவொரு பணியையும் செய்யாமல், தற்போதைய அரசாங்கமே அடுத்த முறை நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கு எங்களை விட அதிகமாக முயற்சி செய்து வருகிறது. அவர்களின் இத்தகைய செயற்பாடுகளினால் எங்களது வெற்றி உறுதியாகியுள்ளது. அனுபவமும் பக்குவமும் இல்லாத இந்த அரசாங்கத்திற்குப் பிறகு, புதிய அரசாங்கத்தின் பாதையை அமைக்க நாங்கள் தயாராகிவிட்டோம்” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தேனுக விதானபத்திரன, ஜானக வக்கும்புர மற்றும் இந்திக அனுருத்த ஆகியோர், தற்போதைய அரசாங்கத்தின் தவறுகள் மற்றும் குறைபாடுகள் குறித்து விரிவாகப் பேசினர். புதிய அமைப்பாளருக்குத் தங்கள் வாழ்த்துகளையும் அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

