சீனா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க 'நட்புறவு, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவிக்கான' உடன்படிக்கையின் 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வடகொரியப் பிரதமர் பாக் தே சோங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பெய்ஜிங் சென்றுள்ளார். 1961 ஆம்…

சீனா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க 'நட்புறவு, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவிக்கான' உடன்படிக்கையின் 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வடகொரியப் பிரதமர் பாக் தே சோங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பெய்ஜிங் சென்றுள்ளார்.

1961 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் திகதி கையெழுத்திடப்பட்ட இந்த உடன்படிக்கையின் பிரகாரம், இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தப்பட்டால், மற்றைய நாடு அதற்கு இராணுவ ரீதியாக உதவ வேண்டும் என்ற பரஸ்பர பாதுகாப்பு விதிமுறை இன்றும் அமல் உள்ளது.இராணுவக் கூட்டணி உடன்படிக்கை சீனாவின் ஒரேயொரு உத்தியோகபூர்வ இராணுவக் கூட்டணி உடன்படிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், கடந்த 65 ஆண்டுகளில் இரு நாடுகளினதும் பொருளாதார மற்றும் உலகளாவிய நிலைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக உருவெடுத்துள்ள போதிலும், வடகொரியா தனது அணு ஆயுதப் பரீட்சார்த்தங்கள் காரணமாக சர்வதேசத் தடைகளுக்கு முகம்கொடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடாகவே தொடர்கின்றது.

1950 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கொரியப் போரின் போது, அமெரிக்கப் படைகளுக்கு எதிராக வடகொரியாவிற்காகப் பல்லாயிரக்கணக்கான சீனப் படையினர் தமது உயிர்களைத் தியாகம் செய்திருந்தனர்.

இந்த வரலாறு இன்றும் இரு நாட்டுத் தலைவர்களாலும் "குருதியால் எழுதப்பட்ட நற்புறவு" என சிலாகிக்கப்படுகின்றது. சீனா தனது எல்லையில் பிராந்திய ஸ்திரத்தன்மையை மட்டுமே எதிர்பார்க்கின்றது.

வடகொரியாவின் ஆட்சி வீழ்ச்சியடைந்தால், மில்லியன் கணக்கான அகதிகள் சீன எல்லைக்குள் நுழைவர் என்றும், அமெரிக்க ஆதரவு பெற்ற ஒருங்கிணைந்த கொரியாவொன்று தனது எல்லைக்கு அருகில் உருவாகிவிடும் என்றும் சீனா அஞ்சுகின்றது.அணு ஆயுதக் கொள்கை

இதனால், வடகொரியாவை அமெரிக்காவிற்கு எதிரான ஒரு மூலோபாயப் பாதுகாப்பு வளையமாக சீனா பயன்படுத்தி வருகின்றது.

வடகொரியாவின் மாற்றுத் திட்டங்கள் மறுபுறம், வடகொரியா முழுமையாகச் சீனாவில் மட்டும் தங்கியிருக்க விரும்பவில்லை.

2024 ஆம் ஆண்டில் ரஷ்யாவுடன் கையெழுத்திடப்பட்ட மூலோபாயக் கூட்டாண்மை உடன்படிக்கையின் மூலம் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஆதரவைப் பெற்றுள்ள வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், தற்போது இராணுவத் தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தித் தேவைகளுக்கு ரஷ்யாவை ஒரு முக்கிய மாற்றாகப் பயன்படுத்துகின்றார். இது சீனாவிற்குச் சற்றே அதிருப்தியை ஏற்படுத்திய போதிலும், வடகொரியா மீதான தனது செல்வாக்கை ரஷ்யாவிடம் இழக்க சீனா தயாராக இல்லை.

அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தமக்கு இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சிகளைத் தீவிரப்படுத்தி வருவதனால், பெய்ஜிங்கிற்கும் பியங்யாங்கிற்கும் இடையிலான மூலோபாயத் தேவை மேலும் அதிகரித்துள்ளது.

வடகொரியாவின் அணு ஆயுதக் கொள்கைகளில் சீனாவிற்கு உடன்பாடு இல்லாத போதிலும், மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிராக வடகொரியாவைத் தனது பக்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் சீனா உள்ளமை குறிப்பிடத்தக்கது.