நாட்டில் உள்ள சிறைச்சாலைகளின் தற்போதைய அவல நிலை மற்றும் அண்மையில் நீர்க்கொழும்பில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போதைய அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடி ஒரு சமூகப் பிரச்சினை என்றும், இதற்கு அரசாங்கமே மு…
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளின் தற்போதைய அவல நிலை மற்றும் அண்மையில் நீர்க்கொழும்பில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போதைய அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடி ஒரு சமூகப் பிரச்சினை என்றும், இதற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சிறைச்சாலைகளில் தற்போது எழுந்துள்ள பிரச்சினை டெங்கு பரவல் தொடர்பிலானது என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன.கிராமப்புறங்களில் உள்ள சாதாரண வைத்தியசாலைகளிலேயே மருந்துப் பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவும் போது, சிறைச்சாலைகளில் மருந்துப் பொருட்கள் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் மருந்துத் தட்டுப்பாடு குறித்து மேடைகளில் குதித்துக் குதித்துப் பேசியவர்கள், இன்று அமைதி காக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் பிரச்சினை ஆரம்பமான உடனே அரசாங்கம் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால், நிலைமைகளை ஓரளவு கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால், அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் ஒரு முழு இரவை அப்படியே கழிய விட்டது என குறிப்பிட்டுள்ளார். இதனால் மறுநாள் காலையில் வழமையான அடாவடித்தனம் முன்னெடுக்கப்பட்டதாகவும், இந்த அலட்சியப் போக்கின் காரணமாக இறுதியில் 27 பேரின் உயிர்கள் பலியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரை எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ‘இவ்வாறான சம்பவங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என அன்று அவர் நாடாளுமன்றில் முழக்கமிட்டார் என நாமல் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல், கடந்த 2020 ஆம் ஆண்டு சிறைச்சாலையில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்ற போது, அப்போதைய ராஜாங்க அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தார்; அவருக்குப் பதிலாக வேறொருவர் நியமிக்கப்பட்டார். மேலும், அதுகுறித்து ஆராய்ந்த விசாரணைக் குழு சில முக்கிய பரிந்துரைகளையும் வழங்கியிருந்தது என தெரிவித்துள்ளார். 10,000 அல்லது 11,000 கைதிகளை மட்டுமே தடுத்து வைக்கக்கூடிய கொள்ளளவு கொண்ட சிறைச்சாலைகளில், 40,000-க்கும் மேற்பட்டவர்களை அடைத்து வைத்தால் அங்கு நிச்சயமாக சமூகப் பிரச்சினை வெடிக்கும். அதுவே பின்னர் கலவரமாக மாறும். எனவே, இதுவொரு சமூகப் பிரச்சினையாகும். இந்த சமூகப் பிரச்சினைதான் நீர்க்கொழும்பில் வெடித்தது என சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இரண்டு ஆண்டுகள் நெருங்கப் போகிறது. ஆனால், கடந்த கால அரசாங்கங்கள் மீது வீண் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதைத் தவிர இவர்கள் வேறு எதனையும் செய்யவில்லை. குறைந்தபட்சம், வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தி சிறை நெருக்கடியைக் குறைக்க ‘அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை’ விரைவாகப் பெற்றுக்கொள்ள இவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன?" என கேள்வி எழுப்பியுள்ளார். சிறைச்சாலைகளில் 45,000 கைதிகள் இருக்கும் போது, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. இந்த நிர்வாகக் குறைபாடுகளால் இறுதியில் ஏழு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்தள்ளார். மறுபுறம், அரசியல் காரணங்களுக்காக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்பொழுது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறு பரிந்துரைத்துள்ளது. எனினும், அரசாங்கம் அதற்கு இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை" என நாமல் ராஜபக்ச தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

