நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தடுத்திருக்க முடியும் என்றும், சரியான அரசியல் தலைமைத்துவம் மற்றும் பொறுப்பான அமைச்சர்களின் தலையீடு இல்லாததே இத்தனை மரணங்களுக்கும் காரணம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேர…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தடுத்திருக்க முடியும் என்றும், சரியான அரசியல் தலைமைத்துவம் மற்றும் பொறுப்பான அமைச்சர்களின் தலையீடு இல்லாததே இத்தனை மரணங்களுக்கும் காரணம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) அன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை நண்பகல் தொடங்கிய மோதலில் மாலை 4 மணியளவில் 24 பேர் காயமடைந்து இருவர் உயிரிழந்தனர். இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தும், பொறுப்பான நீதி அமைச்சர் திங்கட்கிழமை மாலை வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஒருவரைக்கூட இதுவரை நியமிக்காமல், பதில் ஆணையாளரை வைத்திருப்பது தலைமைத்துவமற்ற நிலையை உணர்த்துகிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “சம்பவம் நடந்த அன்றைய தினமே கலகம் அடக்கும் படையினரையோ அல்லது அதிரடிப்படையினரையோ அழைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அழைக்கப்படவில்லை. அமைச்சரோ, ‘சமூக வலைத்தளங்களைச் சரியாகப் பார்க்கவில்லை’ என்று பொறுப்பற்ற முறையில் பதிலளித்தார். சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகள் உள்ளே சென்றார்களே தவிர, கலகத்தை அடக்கும் பயிற்சி பெற்ற படையினர் யாரும் வரவில்லை. இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெறுவதில் உள்ள தாமதமும் சிறைச்சாலை நெருக்கடிக்கு ஒரு முக்கிய காரணம்” என்று சுட்டிக்காட்டினார்.
“திங்கட்கிழமை காலையிலேயே அதிரடிப்படை மற்றும் இராணுவத்தை அழைத்து பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தால், இரண்டாம் நாள் கலவரத்தையும் அதிக உயிர்ப் பலிகளையும் தடுத்திருக்க முடியும். சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாமையே இந்த அவலத்திற்கு வழிவகுத்துள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

