இலங்கையின் சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் குறைத்தல், நிர்வாகச் செயற்திறனை மேம்படுத்துதல் மற்றும் சிறைச்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளை நடைமுறைப்படுத்துதல் குறித்து, 'ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு'வில் விரிவாக…

இலங்கையின் சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் குறைத்தல், நிர்வாகச் செயற்திறனை மேம்படுத்துதல் மற்றும் சிறைச்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளை நடைமுறைப்படுத்துதல் குறித்து, 'ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு'வில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக தலைமையில், அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய இக்குழுவிலேயே இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில் சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல், புதிய கட்டடங்களை நிர்மாணித்தல், தற்போதுள்ள வசதிகளை மறுசீரமைத்தல், சிறைச்சாலைத் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் கைதிகளைத் திறம்பட நிர்வகிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆழமாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தில் காணப்படும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகப் புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளுதல், சேவைத் தேவைகளுக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு நடைமுறைகளைத் திருத்தியமைத்தல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் சேவை நிலைமைகளை மேம்படுத்துதல் தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது.

மேலும், போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் தாமதத்தைத் தவிர்ப்பதற்காக, குறித்த திணைக்களத்தின் திறனை அதிகரித்தல், நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதன் அவசியம் குறித்தும் குழு வலியுறுத்தியது.

சிறைச்சாலை நெரிசலைக் கட்டுப்படுத்துவது வெறுமனே நிர்வாக ரீதியான விடயமாக அல்லாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக் கருதிச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை இக்குழு சுட்டிக்காட்டியது. அத்துடன், நீதிமன்றம், இலங்கை பொலிஸ், சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டியதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் குழுவின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர மற்றும் குழுவின் உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, தர்மப்பிரிய விஜேசிங்க, எம்.கே.எம். அஸ்லம், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி. சூரியபண்டார, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, அமிர்தநாதன் அடைக்கலநாதன் மற்றும் சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.