"தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டபோது விசாரணைகளைக் கோராதவர்கள், தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவம் குறித்து மட்டும் விசாரணைகளை வலியுறுத்துவது ஏற்புடையதல்ல" என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார். பாராள…
"தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டபோது விசாரணைகளைக் கோராதவர்கள், தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவம் குறித்து மட்டும் விசாரணைகளை வலியுறுத்துவது ஏற்புடையதல்ல" என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(07) நடைபெற்ற தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:
"நாட்டில் அண்மையில் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சிறைக் கைதிகள் மற்றும் சிறைக் காவலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இச்சம்பவம் குறித்துப் பேசுபவர்கள், 43 ஆண்டுகளுக்கு முன்னர் (1983 ஜுலை) வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் குறித்தோ, 1997 டிசம்பர் 12-ஆம் திகதி களுத்துறை சிறையில் கொல்லப்பட்ட மூவர் குறித்தோ அல்லது 2000-ஆம் ஆண்டு பிந்துனுவெவ சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 27 தமிழ் அரசியல் கைதிகள் குறித்தோ இதுவரை எவ்விதப் பதிலும் கூறவில்லை.
இந்தக் கொலைகளைச் செய்தது யார்? அவர்கள் கண்டறியப்பட்டனரா? அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டதா? அல்லது மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் நிகழாதவாறு உறுதிப்படுத்தப்பட்டதா? என்ற கேள்விகள் எங்கள் மத்தியில் எழுகின்றன. தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டபோது மௌனம் காத்தவர்கள், இப்போது நடவடிக்கை எடுக்குமாறு கோருவது 'எனக்கு வந்தால் இரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி' என்ற கதையைப் போல உள்ளது. இனியாவது இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்."

