ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளை நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து, சிறைச்சாலை அமைப்பில் நிலவும் சவால்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினார். இதன்போது, தற்போதைய சிறைச்சாலை கட்டமைப்பில் காணப்படும் பிரச்சி…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளை நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து, சிறைச்சாலை அமைப்பில் நிலவும் சவால்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினார்.
இதன்போது, தற்போதைய சிறைச்சாலை கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு உடனடி தீர்வுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் விசேடமாக ஆராயப்பட்டதுடன், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்நோக்கும் சேவைச் சிக்கல்கள், பணிச்சூழல் மற்றும் நலன்புரி விடயங்கள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, ஜனாதிபதியுடன் நேரடியாக தங்களது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தமைக்கு சிறைச்சாலை அதிகாரிகள் நன்றி தெரிவித்ததுடன், இது போன்ற நேரடி கலந்துரையாடல் முதன்முறையாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

