நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவங்கள், அரசாங்கத்தின் திறமையின்மையையும் இயலாமையையும் சிறைச்சாலை அதிகாரிகளின் வாயிலிருந்தே வெளிப்படுத்தி விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) அன்று நடைபெற்ற ‘பணம் தூயதாக்…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவங்கள், அரசாங்கத்தின் திறமையின்மையையும் இயலாமையையும் சிறைச்சாலை அதிகாரிகளின் வாயிலிருந்தே வெளிப்படுத்தி விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) அன்று நடைபெற்ற ‘பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம்’, ‘நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம்’ மற்றும் ‘பயங்கரவாத நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டமூலம்’ மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். "நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாகச் சீர்குலைந்து, நீதித்துறை மற்றும் சிறைச்சாலை கட்டமைப்புகள் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. மனிதக் கொலைகள், கொள்ளைகள் மற்றும் தேசிய சொத்துக்களை அழித்த வரலாற்றைக் கொண்டவர்கள், இன்று ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக விரல் நீட்டிப் பேசுவது வேடிக்கையானது" என அவர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலைகளில் நிலவும் அழுத்தங்களுக்குத் தீர்வு காணாமல், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதில் மாத்திரம் நீதியமைச்சர் உள்ளிட்ட அரசாங்கம் கவனம் செலுத்துவதே இந்த மோதல்களுக்குக் காரணம். சிறைச்சாலை நிர்வாக முகாமைத்துவப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாது, நீதித்துறையில் தலையிட முயற்சித்ததே இத்தகைய சோகமான சம்பவங்களுக்கு வழிவகுத்துள்ளது.

"காலி 'மகாமோதர' பகுதியில் சிறைச்சாலையொன்றை அமைக்க அரசாங்கம் முற்படுகிறது. ஆனால், அதுவொரு சுற்றுலாப் பிரதேசம் என்பதை அரசாங்கம் மறந்துவிட்டது. இத்தகைய பாரிய சம்பவங்களுக்குப் பின்னரேனும் ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சிறைச்சாலைகளை நிர்வகித்தல், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்குத் தீர்வுகாணல், டெங்கு ஒழிப்பு மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கல் என எந்தவொரு முக்கிய விவகாரத்திலும் அரசாங்கம் திறம்படச் செயல்படவில்லை என்று அவர் சாடினார்.

"ஐக்கிய மக்கள் சக்தியின் பதவிகளைப் பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தீர்மானிக்க முடியாது. ஜே.வி.பி.யுடன் தொடர்புடைய எவரும் போதைப்பொருள் கடத்தலில் அல்லது பயன்பாட்டில் இல்லை என்பதை அவர்களால் நிரூபிக்க முடியுமா?" என அவர் சவால் விடுத்தார்.

மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை சம்பவங்களின் போது எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சித்த ஜனாதிபதி, தற்போது அவரிடமே அரச அதிகாரம் இருப்பதால், அன்று கூறியவற்றை நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.