நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டமைக்கு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை அதிகாரிகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்த தவறியமையே பிரதான காரணம் என்று தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி குணத…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டமைக்கு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை அதிகாரிகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்த தவறியமையே பிரதான காரணம் என்று தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர குற்றம் சாட்டினார்.
கொழும்பில் உள்ள தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அரசின் பாரிய தவறு அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,அனுராதபுரம், தங்காலை மற்றும் மஹர சிறைச்சாலை மோதல்களைப் போலன்றி, இம்முறை சிறைச்சாலை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளமையானது, சிறைச்சாலைகள் தற்போது பாதாள உலகக் குழுக்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதை உறுதிப்படுத்துகின்றது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி, ஆயுதமற்ற அதிகாரிகளை இவ்வாறான ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தியது அரசின் பாரிய தவறு. தற்போது சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள். மேலும், 70 சதவீதத்தினர் அபராதம் செலுத்த முடியாத ஏழைகளே.இவர்களைப் பராமரிக்க அரசு நாளொன்றுக்கு தலா ஆயிரம் ரூபாவுக்கும் மேல் செலவிடுகின்றது. புதிய சிறைச்சாலைகளை அமைப்பது இதற்குத் தீர்வாகாது. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்காமல், அவர்களை நோயாளிகளாகக் கருதி மறுவாழ்வு அளிப்பதே சிறைச்சாலை நெருக்கடிகளுக்கான உண்மையான தீர்வாகும்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட 27 பக்க அறிக்கையைச் செயற்படுத்தாமல், வெறும் அரசியல் நாடகங்களை நடத்துவதில் பயனில்லை. ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அனைவரும் குறித்த அறிக்கையை வாசித்து, அதன் பரிந்துரைகளை உடனடியாகச் செயற்படுத்த முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

