Colombo (News 1st) கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் 24ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இன்றைய வழக்கு விசாரணையின் போது அவர் ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக ஆஜராகியிருந்தமை குறிப்…
Colombo (News 1st) கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் 24ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இன்றைய வழக்கு விசாரணையின் போது அவர் ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.2008ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆட்கொலைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த விபரங்களை கடந்த ஜூன் 15ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.2008 ஜனவரி 09ஆம் திகதி முருகன் கோவில் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் இருவர் T-65 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை, 2008 மே 22ஆம் திகதி காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை, வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்தியாபுல கண்ணன்குடா பகுதியை சேர்ந்த அழகுதுரை தர்மலிங்கம் என்பவர் அடையாளந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பிலேயே நீதிமன்றத்தில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.சந்தேகநபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 30ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.இதன்போது இன்று(13) திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.வழக்கை எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதவான் அ.தர்சினி உத்தரவிட்டார்.சிவநேசதுரை சந்திரகாந்தன் இதற்கு முன்னரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சில வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

