அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவுக்கு ஆதரவாக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து இடைக்கால மனுக்களும் எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையின் கீழ், பயங்கரவாதத் தடுப்புச்…
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவுக்கு ஆதரவாக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து இடைக்கால மனுக்களும் எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையின் கீழ், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் தம்மைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதைத் தடுக்குமாறு கோரி சுரேஷ் சலே இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் பெங்கமுவே நாலக தேரர், வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்கள் இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், பிரதான மனு தொடர்பாக நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்த பின்னரே இடைக்கால மனுக்களை பரிசீலிக்க முடியும் என நீதிமன்றத்தில் அறிவித்தார்.
வழக்கு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதால், தங்களது நிலைப்பாட்டை முன்வைக்க அனுமதி வழங்குமாறு இடைக்கால மனுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இரு தரப்பினரின் வாதங்களையும் கவனத்தில் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றம், பிரதான மனு தொடர்பான ஆரம்ப நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னரே இடைக்கால மனுக்கள் குறித்து பரிசீலிக்க முடியும் என தெரிவித்ததுடன், அனைத்து மனுக்களையும் எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிட்டது.

