யாழ்ப்பாண நகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறாக இருந்த 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் அப்பகுதிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்திய…
யாழ்ப்பாண நகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறாக இருந்த 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் அப்பகுதிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.தூய்மையான சுற்றுச்சூழலை பேணுவதோடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, யாழ் கோட்டை சுற்றுவட்டம், யாழ்ப்பாணம் பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து யாசகத்தில் ஈடுபட்டவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

