நாட்டில் டெங்கு நோய் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காரணமாக பதிவான மரணங்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளதுடன், மொத்த டெங…
நாட்டில் டெங்கு நோய் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காரணமாக பதிவான மரணங்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளதுடன், மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் 77,000 ஐ கடந்துள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நேற்று (20) ஒரே நாளில் 984 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தற்போது நாடு முழுவதும் 162 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், மே மாதத்தில் 8,590 பேரும், ஜூன் மாதத்தில் 21,537 பேரும், ஜூலை மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் 21,650 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாகாண மட்டத்தில் மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அங்கு 40,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த நோயாளர்களில் 52.67 சதவீதமாகும்.
மேலும், தென் மாகாணத்தில் 11,867 பேரும், மத்திய மாகாணத்தில் 6,492 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அங்கு 16,164 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 15,314 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொண்டு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைக்குமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

