டெங்கு தொற்றுநோய் நிலைமையானது தீவிர தொற்றுநோயாக உருவெடுத்து வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. எனினும் தற்போது நடைமுறையிலுள்ள டெங்கு ஒழிப்புத் திட்டங்களின் மூலம் இந்த நிலைமைக்கு முறையான தீர்வுகள் எட்டப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. ஜூலை மாதத்த…

டெங்கு தொற்றுநோய் நிலைமையானது தீவிர தொற்றுநோயாக உருவெடுத்து வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. எனினும் தற்போது நடைமுறையிலுள்ள டெங்கு ஒழிப்புத் திட்டங்களின் மூலம் இந்த நிலைமைக்கு முறையான தீர்வுகள் எட்டப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. ஜூலை மாதத்தின் முதலாவது வாரம் நிறைவடையும் போது 142 ஆக காணப்பட்ட அதி அபாய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை, தற்போது 175 ஆக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, குறிப்பிட்டுள்ளார்.டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்வது ஒரு 'சிவப்பு எச்சரிக்கை' (Red Alert) விடுக்கப்பட வேண்டிய சூழ்நிலையாகும் என தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடியை சமாளிக்க முறையான திட்டமிடல்கள் எதனையும் தற்போது காண முடியவில்லை என அவர் தெரிவித்தார். டெங்கு ஒழிப்பு தொடர்பாக கீழ்நிலை தீர்மானங்களை எடுக்கும் வேகம் போதாது எனவும், குறைந்தபட்சம் இது தொடர்பாக ஜனாதிபதி செயலணி ஒன்றாவது உடனடியாக நிறுவப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இந்த நிலைமை இதே போன்று தொடருமானால், 2017 ஆம் ஆண்டில் நாம் கண்ட பாரிய பேரழிவை மீண்டும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 32 டெங்கு மரணங்கள் பதிவாகியிருந்த போதிலும், ஜூலை மாதத்தின் முதலாவது வாரத்தில் மாத்திரம் 15 மரணங்கள் பதிவாகியுள்ளன. இது டெங்கு தீவிர தொற்றுநோய் நிலைமை ஏற்படுவதற்கான ஒரு முன்கூட்டிய அறிகுறியாகும் எனவும் வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.