ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முறையான தலைமைத்துவம் அவசியம் என தெரிவித்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, தமிழ் கட்சிகள் ஒன்றிணைவு குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு க…

ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முறையான தலைமைத்துவம் அவசியம் என தெரிவித்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, தமிழ் கட்சிகள் ஒன்றிணைவு குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அன்றாடம் வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் கொண்டிருந்தாலும், அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிடுகின்றது.

விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் ஒரே நேரத்தில் பாதிப்பு ஏற்படாதவாறு, அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையிலான தீர்மானங்களை அரசாங்கம் இந்தச் சந்தர்ப்பத்தில் எடுக்க வேண்டும்.

நெல் கொள்முதல் விலைத் தொடர்பாக அரசாங்கம் தெளிவான மற்றும் நேரடியான பதிலைக் கொண்டிருக்க வேண்டும். நாடு தற்போது மிகவும் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழ் கட்சிகள் ஒன்றிணையப்போவதாகக் கூறினாலும், அவை எங்கு, எவ்வாறு ஒன்றிணையப் போகின்றன என்பது குறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை. மக்களின் வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்றார்.