தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமது சமூகங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடவும், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும், இணக்கப்பாட்டை எட்டவும் பொதுவான தளமொன்றை உருவாக்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு அரசியல் கட்சியும் தமது கொள்கை…
தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமது சமூகங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடவும், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும், இணக்கப்பாட்டை எட்டவும் பொதுவான தளமொன்றை உருவாக்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் தமது கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளைத் தனித்துவமாகப் பேணுவதற்கும் முன்வைப்பதற்கும் உள்ள சுதந்திரத்தை ஏற்றுக்கொண்ட பிரதிநிதிகள், பொதுவான நலன்களைக் கொண்ட விடயங்களை அடையாளம் கண்டு, சாத்தியமான சந்தர்ப்பங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு பொறிமுறையாக இந்தத் தளம் அமையும் எனத் தெரிவித்தனர்.
இதன்போது பின்வரும் மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது:
புதிய அரசியலமைப்பு அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதாக வழங்கிய உறுதிமொழியைப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
அந்த உறுதிமொழியை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் ஒருமித்த கோரிக்கையொன்றை முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டதுடன், புதிய அரசியலமைப்பானது நீதி, சமத்துவம் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை உறுதிசெய்யும் வகையில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வை உள்ளடக்கியதாக அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மாகாண சபைத் தேர்தல்கள் மாகாண சபைத் தேர்தல்கள் ஓராண்டு காலத்திற்குள் நடத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும், அது தொடர்ச்சியாகத் தாமதமடைந்து வருவது குறித்துப் பிரதிநிதிகள் கவலை வெளியிட்டனர்.
மேலும், ஜனநாயகப் பங்கேற்பையும் பிராந்தியப் பிரதிநிதித்துவத்தையும் உறுதிசெய்வதற்காக, மாகாண சபைத் தேர்தல்களை இனியும் தாமதமின்றி விரைந்து நடத்துமாறு ஒருமித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அனைத்து சமூகங்களையும் பாதிக்கும் காணி பிரச்சினைகள் நாட்டின் மூன்று சமூகங்களையும் பாதிக்கும் தீவிரமான காணிப் பிரச்சினைகள் தொடர்ந்தும் நிலவி வருவதைப் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர்.
இந்த நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு, பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை முன்னெடுத்து, நியாயமான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இப்பொதுத் தளத்தின் ஊடாகத் தொடர்ச்சியான உரையாடல்களை முன்னெடுப்பதற்கான உறுதிப்பாட்டைப் பிரதிநிதிகள் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன், இவ்விடயங்களில் எட்டப்படும் பொதுவான அணுகுமுறையானது நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி மற்றும் அனைத்துச் சமூகங்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பெரிதும் பங்களிக்கும் எனவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

