முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை பொலிஸார் காலால் உதைத்து கீழே தள்ளி தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.நேற்று…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை பொலிஸார் காலால் உதைத்து கீழே தள்ளி தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.நேற்று (08) மாலை சுமார் 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள காணொளியில், இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் காணப்படுவதுடன், அவர்களில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.சம்பவத்தின் போது பொலிஸார் மதுபோதையில் இருந்து இளைஞர்களை தாக்கியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இதுவரை பொலிஸ் நிலையத்தில் எந்தவொரு உத்தியோகபூர்வ முறைப்பாடும் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரியவருகிறது.

அதேவேளை, தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரிகள், இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்துமாறு அறிவுறுத்தியபோதும் அவர்கள் நிறுத்தாமல் சென்றதாகவும், அதன் பின்னரே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகியுள்ள நிலையில், முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை நடத்தப்பட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுவரை சம்பவம் தொடர்பாக பொலிஸார் உத்தியோகபூர்வ அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.