வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தனது 14 வயது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட 47 வயதுடைய தந்தைக்கு, வவுனியா மேல் நீதிமன்றம் 45 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்துள்ளது. இன்று (16) வழங்கப்பட்ட தீர்ப்பில், வவுனியா மேல் நீதி…
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தனது 14 வயது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட 47 வயதுடைய தந்தைக்கு, வவுனியா மேல் நீதிமன்றம் 45 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இன்று (16) வழங்கப்பட்ட தீர்ப்பில், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, பாதிக்கப்பட்டவருக்கு மொத்தம் 12 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், நீதிமன்றத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையின் போது, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட நான்கு பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த சம்பவத்தையடுத்து சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். பின்னர், சட்டமா அதிபர் திணைக்களம் 2022 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
நீதிமன்றம், இரண்டு தனித்தனி வழக்குகளில் நிரூபிக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்காக மொத்தம் 45 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்ததுடன், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 3 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 12 இலட்சம் ரூபாயை பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டது.
அத்துடன், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு இலட்சம் ரூபாயை நீதிமன்ற அபராதமாக செலுத்தவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டத்தரணி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ ஆஜராகினார்.
தீர்ப்பின்போது கருத்து வெளியிட்ட நீதிபதி, பாதுகாப்பளிக்க வேண்டிய தந்தையே இத்தகைய கொடூரமான குற்றத்தை புரிந்துள்ளதால் எந்தவித தளர்வும் வழங்காமல் அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

