இறுதி யுத்தத்தின் போது தமிழர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறு…

இறுதி யுத்தத்தின் போது தமிழர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பணத்தூய்மைப்படுத்தல் மற்றும் நிதிசார் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.தமிழர்களின் நகைகள்

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"தமிழீழ வைப்பகத்தில் தமிழ் மக்கள் அடகு வைத்திருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை, இறுதி யுத்தத்தின் போது ராஜபக்ச அரசே கொள்கலன்களில் ஏற்றிச் சென்றதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார். தான் அந்த நகைகளை அரசிடம் ஒப்படைத்ததாகவும், அவற்றுக்கு என்ன நடந்தது என்றும் அவர் கேள்வியெழுப்பியும் உள்ளார்.

கொள்ளையடிக்கப்பட்ட அந்த நகைகள் மற்றும் சொத்துக்கள், தூயதாக்கல் நடவடிக்கைகளுக்காக உகண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ராஜபக்ச குடும்பத்தினரால் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனது தொகுதியைச் சேர்ந்த 816 பேர், தமது நகைகளை மீட்டுத் தருமாறு என்னிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நகைகளை மக்களிடம் வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி வழங்கிய அரசு, இப்போது அந்த நகைகளை அரசாங்க நிதிக்கு மாற்றப் போவதாகக் கூறுவது பாரிய ஏமாற்று வேலை" என குறிப்பிட்டுள்ளார்.சுரேஷ் சலே முதல் கோட்டாய ராஜபக்ச வரை பல்வேறு விசாரணைகளை முன்னெடுக்கும் அரசு, இந்த நகை கொள்ளை குறித்து ஏன் விசாரணை நடத்துவதில்லை? இது தமிழர்களின் சொத்து என்பதால் அலட்சியமாக இருக்கிறீர்களா?" என்றும் சிறீதரன் எம்.பி. ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த நகைகளை மீள வழங்க அல்லது அவற்றின் பெறுமதியைக் கையளிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாவட்ட அரச அதிபர்கள் ஊடாக நகைகளை இழந்தவர்களின் பட்டியலைத் திரட்டி, ராஜபக்ச அரசு எவ்வளவு சொத்துக்களைக் கொள்ளையடித்தது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இதன்போது வலியுறுத்தினார்.

மேலும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் கொண்டுவரப்பட்ட நிதிகள் மற்றும் அரச வங்கிகளில் சட்டரீதியாக வைக்கப்பட்டிருந்த பணத்தையும் அரசுகள் பகற்கொள்ளையடித்துள்ளன என்று தெரிவித்த அவர், அந்த நிதியையும் மீள மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.