அனைத்து மக்களுக்கும் தரமான, பாதுகாப்பான மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்துச் சேவையை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான த…
அனைத்து மக்களுக்கும் தரமான, பாதுகாப்பான மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்துச் சேவையை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
தரமான பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்துவதன் மூலம், தனிப்பட்ட போக்குவரத்திற்காக மக்கள் மேற்கொள்ளும் செலவினங்களை குறைத்து, அனைவருக்கும் பயனளிக்கும் போக்குவரத்து அமைப்பை உருவாக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், இலவச சுகாதாரச் சேவையின் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் போலவே, பொதுப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கலந்துரையாடலின் போது, பழைய பேருந்துகளை படிப்படியாக சேவையிலிருந்து நீக்கி புதிய பேருந்துகளை இணைக்கும் திட்டம், நகர்ப்புற குறுகிய தூரப் பயணங்களுக்கு மெட்ரோ வகை பேருந்துகளை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் அடுக்குமாடி வீடமைப்பு, நகர்ப்புற கழிவு முகாமைத்துவம் மற்றும் நகர மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டது.
அடுத்த ஆண்டுக்குள் நிறைவு செய்யக்கூடிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து தேவையான நிதியை ஒதுக்குமாறும், வெளிநாட்டு கடன் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தெளிவான பயன்கள் உறுதி செய்யப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

