அம்பாறை மாநகர சபைக்கு உட்பட்ட நவகம்புர தொழிற்பேட்டையில் அமைந்துள்ள 'பிரபோத' நிறுவனத்திற்குச் சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலையில் நேற்று (13) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பெரும் சொத்துச் சேதம் ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையின் கதவு ஒன்றில் ஊழியர்கள் வெல்டிங் (பற்றவைப்பு) பணியி…

அம்பாறை மாநகர சபைக்கு உட்பட்ட நவகம்புர தொழிற்பேட்டையில் அமைந்துள்ள 'பிரபோத' நிறுவனத்திற்குச் சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலையில் நேற்று (13) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பெரும் சொத்துச் சேதம் ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலையின் கதவு ஒன்றில் ஊழியர்கள் வெல்டிங் (பற்றவைப்பு) பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதிலிருந்து தெறித்து விழுந்த தீப்பொறி அருகிலிருந்த தேங்காய் நார் குவியலின் மீது பட்டதே இந்த விபத்திற்கு முதற்காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது. தேங்காய் நார் மற்றும் உமி போன்றவை மிக வேகமாகத் தீப்பற்றக்கூடியவை என்பதால், தீப்பொறி விழுந்த சில நிமிடங்களிலேயே தொழிற்சாலை முழுவதும் தீ மளமளவெனப் பரவியுள்ளது. இதனால் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெருமளவிலான தேங்காய் நார்களும் உமிகளும் எரிந்து சாம்பலாகியுள்ளன.

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், இலங்கை விமானப்படை முகாமின் தீயணைப்புப் பிரிவினரும், அம்பாறை மாநகர சபையின் தீயணைப்புப் படையினரும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இரு தரப்பினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் பயனாக, தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நேற்று மாலை வரை தீயை முழுமையாக அணைக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

இந்த விபத்தினால் ஏற்பட்டுள்ள முழுமையான சொத்துச் சேத விவரங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை. இச்சம்பவம் குறித்து அம்பாறை தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்