கடந்த ஒரு வருட காலத்தில் தபால் மூலம் ஆட்பதிவு திணைக்களத்திற்கு சுமார் 3,800 தேசிய அடையாள அட்டைகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இவற்றில் 2,433 அடையாள அட்டைகள் 2005ஆம் ஆண்டு பிறந்த பாடசாலை விண்ணப்பதாரர்களுக்குச் சொந்தமானவை எனவும், இது மொத…
கடந்த ஒரு வருட காலத்தில் தபால் மூலம் ஆட்பதிவு திணைக்களத்திற்கு சுமார் 3,800 தேசிய அடையாள அட்டைகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவற்றில் 2,433 அடையாள அட்டைகள் 2005ஆம் ஆண்டு பிறந்த பாடசாலை விண்ணப்பதாரர்களுக்குச் சொந்தமானவை எனவும், இது மொத்த எண்ணிக்கையில் 64 சதவீதம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பதாரர்கள் 2020ஆம் ஆண்டில் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்திருந்த போதிலும், அவற்றை வழங்குவதற்கு திணைக்களம் சுமார் நான்கு வருட காலத்தை எடுத்துள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விண்ணப்பதாரர்களின் முகவரி மாற்றம், வெளிநாடு சென்றமை, உயிரிழப்பு மற்றும் தவறான முகவரி பதிவுகள் உள்ளிட்ட காரணங்களால் பல அடையாள அட்டைகள் மீண்டும் தபால் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அச்சிடும் போது ஏற்பட்ட பிழைகள் மற்றும் புதிய அடையாள அட்டைகள் வழங்கும் சந்தர்ப்பங்களில் பழைய அடையாள அட்டைகள் மீளப் பெறப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு சேகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் சுமார் 6 இலட்சத்தை அண்மித்துள்ளதாகவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சேகரிக்கப்படும் தேசிய அடையாள அட்டைகளை அழிப்பதற்கான முறையான மற்றும் செயற்றிறன் மிக்க நடைமுறை திணைக்களத்தில் இல்லை எனவும் கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

