All Section தென் மாகாண ஆசிரியர் ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சையில் சித்திபெற்ற பட்டதாரிகளின் பிரச்சினை குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் தென் மாகாண ஆசிரியர் ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சையில் சித்திபெற்ற பட்டதாரிகளின் பிரச்சினை குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவன…

All Section

தென் மாகாண ஆசிரியர் ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சையில் சித்திபெற்ற பட்டதாரிகளின் பிரச்சினை குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம்

தென் மாகாண ஆசிரியர் ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சையில் சித்திபெற்ற பட்டதாரிகளின் பிரச்சினை குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. 2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தென் மாகாண ஆசிரியர் ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சையில் சித்திபெற்று நேர்முகத் தேர்வுக்குத் தோற்றியிருந்தபோதும் அதன்பின்னரான நிபமனங்கள் இடைநிறுத்தப்பட்ட பட்டதாரிகளின் பிரச்சினைகள் குறித்து கல்வி, ஊழியப்படை, மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.

குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.

தென் மாகாணத்தில் காணப்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் நோக்கில் போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அதே தேர்வின் அடிப்படையில் மேலும் 704 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட்டிருந்தன. எனினும், 2025 ஜூன் மாதத்தில் எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் அனைத்து ஆட்சேர்ப்புகளும் நிறுத்தப்பட்டதாகவும், இதன் காரணமாக மேற்கண்ட நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களுக்கு கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் குழுவில் கலந்துகொண்ட பட்டதாரிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக கல்வி அமைச்சு மற்றும் தென் மாகாணக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். தெற்கு மாகாணத்தில் இதுவரை 1417 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் 2023 போட்டிப் பரீட்சைக்குப் பின்னர் இரண்டு போட்டிப் பரீட்சைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

704 வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் ஆட்சேர்ப்பை மேற்கொள்ளப் பல தடவைகள் தனியான அனுமதிகளைக் கோரிய போதும், அது வெற்றியளிக்கவில்லையென அதிகாரிகள் தெரிவித்தனர். இது பற்றி இடம்பெற்ற நீண்ட நேரக் கலந்துரையாடலின் பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய குழு, இதுபற்றிய பரிந்துரைகளை அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதன்படி எதிர்காலத்தில் இதுபற்றி மேலும் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தது.

போட்டிப் பரீட்சையின்றி கல்வியியல் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படாதது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக கல்வியியல் பட்டதாரிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய குழுவொன்றும் துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தது. அரசாங்க அதிகாரிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இப்பிரச்சினை தொடர்பாக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் விளக்கம் கோர நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் இவ்விடயத்தை மீண்டும் ஆராய எதிர்பார்ப்பதாகவும் குழு அறிவித்தது.

மேலும், 2008/2009-ஆம் ஆண்டுகளில் பணியமர்த்தப்பட்ட பாடசாலை ஆய்வுகூடப் பணியாளர்கள் மற்றும் பாடசாலைப் பாதுகாவலர்களுக்கான சம்பள உயர்வுகளை 2018 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விடயம் குறித்தும் குழு கலந்துரையாடியது. அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அக்குழுவின் பிரதிநிதிகளும் குழுவிற்கு வரவழைக்கப்பட்டனர்.

2008/2009-ல் அவர்கள் நியமிக்கப்பட்டபோது தெற்கு மாகாண சபை தவறான சம்பள விகிதத்தை நிர்ணயித்திருந்தமையே 2018 முதல் சம்பள உயர்வு நிறுத்தப்பட்டமைக்குக் காரணம் எனக் கூறப்பட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட ஒப்புதலை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஊழியர்களிடமிருந்து பணத்தை வசூலிப்பது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய குறித்த விடயத்தில் தங்களால் இயன்ற மிகவும் நியாயமான ஒரு முன்மொழிவை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும், அதற்கேற்ப ஒரு நியாயமான தீர்வை வழங்கத் தாங்கள் தலையிடுவோம் என்றும் தெற்கு மாகாண கல்வி அமைச்சிற்குக் குழு வலியுறுத்தியது.

அதனைத் தொடர்ந்து, குழு உறுப்பினரான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ அவர்கள் குழுவிற்குத் தலைமையேற்று நடத்திச் சென்றார். களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பிந்தைய பட்ட ஆய்வு நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பின்முகாமைத்துவ பட்ட ஆய்வு நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், மற்றும் இலங்கை-ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.

இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி வி.ராதாகிருஷ்ணன், அபுபக்கர் ஆதம்பாவா, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி நிலுஷா லக்மாலி கமகு, சுகத் வசந்த.தசில்வா, சுஜீவ திசாநாயக்க, சானக மாதுகொட, சஞ்ஜீவ ரணசிங்க, துரைராசா ரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.