தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) விசாரணை அதிகாரிகளால…
தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) விசாரணை அதிகாரிகளால் இன்று காலை 9.20 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின்படி, 2014ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தல் காலத்தில் அரசின் அபிவிருத்தித் திட்டங்களை விளம்பரப்படுத்தும் நோக்கில் 250,000 சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை அச்சிடுமாறு சிலாபம் மற்றும் குருநாகல் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு, அவற்றின் மூலம் ரூ.2.665 மில்லியன் செலவிடச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வெள்ள நிவாரணம் என்ற பெயரில் வழங்குவதற்காக 10,000 ஆடைத் தொகுதிகளை முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் கொள்வனவு செய்து, சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு ரூ.3.275 மில்லியனும், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு ரூ.3.075 மில்லியனும் நட்டத்தை ஏற்படுத்தியதுடன், அவை உரிய முறையில் விநியோகிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மே தின பேரணிகளுக்காக சிலாபம் மற்றும் குருநாகல் பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து ஆயிரக்கணக்கான டி-சேர்ட்டுகள் மற்றும் சேலைகளை பெற்றுத்தருமாறு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்னெடுத்து வருகிறது.

