தமிழகத்தின் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அமைந்துள்ள அரசு திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் நேற்று (07) ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், சுமார் ரூ.3.5 கோடி மதிப்பிலான 27 ஆயிரம் நெல் மூட்டைகள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீ விபத்தைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று (08) காலையும் தீ…
தமிழகத்தின் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அமைந்துள்ள அரசு திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் நேற்று (07) ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், சுமார் ரூ.3.5 கோடி மதிப்பிலான 27 ஆயிரம் நெல் மூட்டைகள் எரிந்து சேதமடைந்துள்ளன.
தீ விபத்தைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று (08) காலையும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆலங்குளம் அருகிலுள்ள ஐந்தாங்கட்டளையில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அரசு நெல் சேமிப்புக் கிடங்கில், மாவட்டத்தின் பல்வேறு கொள்முதல் நிலையங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 6.25 இலட்சம் நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று காலை கிடங்கின் ஒரு பகுதியில் திடீரென தீ பரவியதைத் தொடர்ந்து, ஆலங்குளம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீ வேகமாக பரவியதால் தென்காசி மற்றும் சுரண்டை பகுதிகளிலிருந்தும் மேலதிக தீயணைப்பு வாகனங்களும் வீரர்களும் வரவழைக்கப்பட்டனர்.
தீ தற்போது பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தாலும், நெல் மூட்டைகளின் இடைவெளிகளில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறி வருவதால் தீயணைப்பு பணிகள் தொடர்கின்றன.
அதேவேளை, ஒரு புறம் தீயை முழுமையாக அணைக்கும் பணிகளும், மறுபுறம் எஞ்சிய நெல் மூட்டைகளை பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றும் நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பாதுகாக்கப்பட்ட அரசு நெல் கிடங்கில் தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. மர்ம நபர்கள் தீ வைத்தார்களா அல்லது மின்கசிவு உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணமா என்ற கோணங்களில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

