வட மத்திய மாகாண பிரதான கால்வாய் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதையின் அகழ்வுப் பணிகள் இன்று (15) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. கொண்டூருவாவவிலிருந்து பலுகஸ்வெவ வரை 27.7 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சுரங்கப்பாதை, சு…

வட மத்திய மாகாண பிரதான கால்வாய் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதையின் அகழ்வுப் பணிகள் இன்று (15) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

கொண்டூருவாவவிலிருந்து பலுகஸ்வெவ வரை 27.7 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சுரங்கப்பாதை, சுமார் 60 பில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து அனுராதபுரம் யக்கல்ல வழியாக ஹுருலு வெவ வரை நீரை கொண்டு செல்லும் வட மத்திய கால்வாய் திட்டத்தின் முக்கிய அங்கமாக இந்தச் சுரங்கப்பாதை அமைந்துள்ளது.

சுரங்கப்பாதையை அமைப்பதற்காக ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு நவீன சுரங்கத் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 மீட்டர் விட்டம் கொண்ட இந்த நீர்ப்பாசன சுரங்கப்பாதையை உள்ளடக்கிய வட மத்திய பிரதான கால்வாய், வட மத்திய மற்றும் வட மாகாணங்களின் நீர்ப்பாசன மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் என மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் என்.யு.கே. ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் நிறைவு பெறுவதன் மூலம் விவசாயம், நீர் முகாமைத்துவம் மற்றும் பிராந்திய அபிவிருத்திக்கு குறிப்பிடத்தக்க பலன்கள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.