உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு காட்டு விலங்குகளின் உடல் பாகங்களிலிருந்து செய்யப்பட்ட நகைகளை விற்பனை செய்து வந்த தங்க நகை கடையொன்றின் உரிமையாளருக்கு ரூ. 2.1 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொல்கசோவிட்ட - கஹத்துடுவவில் வசிக்கும் ஒரு தொழிலதிபருக்கே…

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு காட்டு விலங்குகளின் உடல் பாகங்களிலிருந்து செய்யப்பட்ட நகைகளை விற்பனை செய்து வந்த தங்க நகை கடையொன்றின் உரிமையாளருக்கு ரூ. 2.1 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொல்கசோவிட்ட - கஹத்துடுவவில் வசிக்கும் ஒரு தொழிலதிபருக்கே நேற்று(08.07.2026) ருவன்வெல்ல நீதவான் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நகைக்கடை உரிமையாளர் கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கஹத்துடுவவில் வசிக்கும் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் விலங்குகளின் எலும்புகள் மற்றும் உடல் பாகங்களிலிருந்து செய்யப்பட்ட மோதிரங்கள் உள்ளிட்ட நகைகளை விற்பனை செய்து கொண்டிருந்தபோது, ​​புலத்கொகுபிட்டிய பீட்டு வனவிலங்கு அதிகாரிகளும், குருநாகல் வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் அலுவலகமும் இணைந்து சோதனை நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, கடந்த ஜூன் 24ஆம் திகதி வனவிலங்கு அதிகாரிகளால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, ருவன்வெல்ல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று(08.07.2026) நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தீய சக்திகளை விரட்டியடிக்கும் மோதிரங்கள் சந்தேக நபர், விலங்குகள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தை மீறி, மோதிரங்கள் மற்றும் கழுத்தணிகளுக்காக காட்டு விலங்குகளின் உடல் பாகங்களைப் பயன்படுத்தியதாக வனவிலங்கு அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்போது, பயன்படுத்தப்பட்ட பொருட்களில் கருங்கற்கள், புலிப் பற்கள், யானைத் தந்தங்கள், தந்தம், சிறப்பு வகை சிப்பிகள் மற்றும் பிற பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த ஆபரணங்களை அணிந்தால் தீய சக்திகளை விரட்டிவிடும் என்று கூறி, அவர் மோசடியாக கழுத்தணிகளையும் மோதிரங்களையும் தயாரித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் சந்தேக நபரை குற்றவாளி என அறிவித்த பின்னர், நீதிபதி அவருக்கு ரூ. 21 லட்சம் அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளார்.

அபராதத்தை மூன்று தவணைகளில் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி, முதல் தவணையான ரூ. 7 லட்சம் தொகையை ஆகஸ்ட் 8 ஆம் திகதி செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.