வீடுகளில் முடங்கிக் கிடக்கும் கைத்தொழில் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில், காத்தான்குடி 'என்.எம் இன்ஸ்டிடியூட்' (NM Institute) ஒரு பிரம்மாண்டமான திறமைக் கண்காட்சிப் போட்டியை நடத்தவுள்ளது. வரும் ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், காத்தான்குடியிலுள்ள 'ரோயல் ஜுமைரா ஹால…
வீடுகளில் முடங்கிக் கிடக்கும் கைத்தொழில் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில், காத்தான்குடி 'என்.எம் இன்ஸ்டிடியூட்' (NM Institute) ஒரு பிரம்மாண்டமான திறமைக் கண்காட்சிப் போட்டியை நடத்தவுள்ளது. வரும் ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், காத்தான்குடியிலுள்ள 'ரோயல் ஜுமைரா ஹால்' (Royal Jumairah Hall) மண்டபத்தில் இக்கண்காட்சி நடைபெறவிருக்கிறது.
இலங்கையின் எந்தப் பகுதியிலிருந்தும் இதில் பங்கேற்கலாம். இது குறித்து கொழும்பில் கருத்துத் தெரிவித்த என்.எம் இன்ஸ்டிடியூட்டின் பணிப்பாளர் முஸ்தகிமா நௌபல், “கல்வித் தகுதியோ, வயது வரம்போ இதற்குத் தடையில்லை. தங்களுக்குள் ஏதேனும் ஒரு கைத்தொழில் திறமையைக் கொண்டுள்ள அனைவரும் இதில் பங்கேற்கலாம்” என்று தெரிவித்தார்.
போட்டிப் பிரிவுகள்: ஆரி வேலைப்பாடு, தையற்கலை, கேக் தயாரிப்பு, சமையற்கலை, எம்பிராய்டரி, கலை மற்றும் கைவினைப் பொருட்கள், மணமகள் அலங்காரம் மற்றும் ஜூனியர் செஃப் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். பரிசுகள்: சிறந்த திறமையாளர்களுக்குத் தங்க, வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படுவதுடன், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும், சிறப்புப் பரிசு வவுச்சர்களும் வழங்கப்படும். வாய்ப்புகள்: 3,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மற்றும் நிறுவனப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவிருப்பதால், பங்கேற்பாளர்களுக்குப் புதிய தொழில் வாய்ப்புகளும், வணிக ஆர்டர்களும் கிடைக்கச் சிறந்த வாய்ப்பாக இது அமையும்.
இந்தத் திறமைக் கண்காட்சி முழுக்க முழுக்க சேவை நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. போட்டியில் கிடைக்கும் வருமானத்தில், நிர்வாகச் செலவுகள் போக எஞ்சிய தொகை அனைத்தும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களுக்கான உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்கவும் வழங்கப்படவுள்ளது.
இதன்போது போலியான கல்வி நிறுவனங்கள் குறித்து எச்சரித்த பணிப்பாளர் முஸ்தகிமா நௌபல், வெளிநாட்டு வாய்ப்புகள் மற்றும் போலியான பட்டங்களை வழங்கி மாணவர்களிடமிருந்து பணம் பறிக்கும் நிறுவனங்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு பெற்றோர்களையும் மாணவர்களையும் கேட்டுக்கொண்டார். முறையான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களை மட்டுமே தேர்ந்தெடுக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
காத்தான்குடியில் இயங்கி வரும் 'என்.எம் இன்ஸ்டிடியூட்', மிக விரைவில் கொழும்பிலும் தனது கிளையைத் திறக்கவிருக்கிறது. குறைந்த கட்டணத்தில் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், இப்போட்டியில் பங்கேற்கவும் ஆர்வமுள்ளவர்கள் தயக்கமின்றித் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

