கையடக்க தொலைபேசி விற்பனை நிலையமொன்றின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில் இரு பிரிவெனா மாணவர்கள் நேற்று (17) எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 4ஆம்…
கையடக்க தொலைபேசி விற்பனை நிலையமொன்றின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில் இரு பிரிவெனா மாணவர்கள் நேற்று (17) எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த 4ஆம் திகதி அதிகாலை எப்பாவெல நகரின் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் இந்தத் திருட்டை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.பிரிவெனா மாணவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள் எப்பாவெல, எந்தகல பகுதியிலுள்ள பிரிவெனா ஒன்றில் தங்கிப் படித்து வரும் 14 வயதுடைய மாணவர்கள் என்றும், அவர்கள் தலாவ - நபடவெவ மற்றும் எப்பாவெல - ரொட்டவெவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், திருடப்பட்ட தொலைபேசிகளின் IMEI எண்கள் மற்றும் தொலைபேசி சமிக்ஞைகளை (Signals) அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னரே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்படும் போது சந்தேகநபர்களிடமிருந்து திருடப்பட்ட 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய 06 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 5000 ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று, சில நவீன கையடக்க தொலைபேசிகளின் விலைகளைக் கேட்டுச் சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் தனக்கு ஒரு கையடக்க தொலைபேசியை வாங்கித் தருமாறு அவர் தனது தந்தையிடம் கேட்டுள்ளார். எனினும், தந்தை அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குறித்த மாணவன், தனது நண்பன் ஒருவனுடன் சேர்ந்து வந்து இந்த கையடக்க தொலைபேசிகளை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர், திருடப்பட்ட கையடக்க தொலைபேசிகளில் இரண்டு கையடக்க தொலைபேசிகளை தங்களது பாவனைக்காக வைத்துக்கொண்டு, ஏனைய நவீன கையடக்க தொலைபேசிகளை பிரிவெனாவின் தேரர் ஒருவருக்கும், தந்தைக்கும், மேலும் சில மாணவர்களுக்கும் கொடுத்துள்ளனர்.
அதன்பின்னர், இந்த மாணவர்கள் திருடப்பட்ட கைபேசி ஒன்றில் தேரருக்கு சொந்தமான சிம் அட்டையைப் (SIM card) பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமையவே, சந்தேகநபர்களைக் கைது செய்யப் பொலிஸாருக்கு வழிவகை கிடைத்துள்ளது. கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும், திருடப்பட்ட கையடக்க தொலைபேசிகளையும் இன்று (18) தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எப்பாவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

