நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் வழியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சிறைச்சாலை பாதுகாவலர் (Prison Guard), வேறொரு சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான அனுருத்த கஜநாயக்கவிட…

நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் வழியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சிறைச்சாலை பாதுகாவலர் (Prison Guard), வேறொரு சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான அனுருத்த கஜநாயக்கவிடம் வினவியபோது, "குறித்த பாதுகாவலரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். மேலும், அவர் மாற்றப்பட்டுள்ள சிறைச்சாலையில், அவர் அலுவலகப் பணிகளில் மட்டுமே ஈடுபடுத்தப்படவுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பிறகு, அந்தப் பாதுகாவலருக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதா என்பது குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார வெலிக்கடை சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் போது தமது உயிரைப் பணயம் வைத்துச் செயற்பட்ட அந்தப் பாதுகாவலருக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என, சிறைச்சாலை அதிகாரிகள் குழுவொன்று அமைச்சரிடம் பலத்த வேண்டுகோள் விடுத்தனர்.