பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சில பேருந்துகள் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்படுவதாகப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, போக்குவரத்து நிர்வாக மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். இன்று (17) ந…
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சில பேருந்துகள் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்படுவதாகப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, போக்குவரத்து நிர்வாக மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 100 பேருந்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட பேருந்துகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சில பேருந்துகளில் இருந்து சேகரிக்கப்பட்ட எரிபொருள் மாதிரிகள் ஆய்விற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கைகளின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்படும் பேருந்துகளை கண்டறியும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தொடர்ந்து கண்காணிப்பை வலுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் மண்ணெண்ணெயை சந்தேகத்திற்கிடமான வகையில் கொள்கலன்களில் வாங்கிச் செல்லும் நபர்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்றும், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

