கண்டி பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு செவ்வாய்க்கிழமை (15) அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. “டித்வா” புயல் குறித்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், அதன் தாக்கத்தைக் குறைப்பதற்கு ஜனாதிபதி,…

கண்டி பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு செவ்வாய்க்கிழமை (15) அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

“டித்வா” புயல் குறித்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், அதன் தாக்கத்தைக் குறைப்பதற்கு ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் உரிய அரச அதிகாரிகளால் உரிய நேரத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று அந்த மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இம்மனுவை ஒக்டோபர் 30 ஆம் திகதி ஆதரவுக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர் ஜனக் டி சில்வா மற்றும் நீதியரசர் அச்சுல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, 2025 நவம்பர் 13 ஆம் திகதியிலிருந்து இலங்கையின் வானிலை முன்னறிவிப்புகளைக் கொண்ட பிபிசி (BBC) ஆவணப்படம் மற்றும் ஸ்லைடுஷோ (slideshow) ஒன்றையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க மனுதாரர் உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்தார்.

மனுதாரர் தமது மனுவில், பிரதிவாதிகள் சில தகவல்களை வெளிப்படுத்த உத்தரவிடுமாறு கோரியுள்ளார். இதற்குப் பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, அரசாங்கம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

இம்மனு தொடர்பிலான மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடப்பட்டது. தேவைப்படின் மனுதாரர் மட்டுப்படுத்தப்பட்ட மறுப்புரைகளைச் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி கீர்த்தி பண்டார கிரிதென இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி, அமைச்சரவை, தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் மீது அவர் இந்த வழக்கைச் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி தமது உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றும் போது மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால், அரசியலமைப்பின் 35 ஆவது உறுப்புரையின்படி சட்டமா அதிபர் முதல் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.

2025 நவம்பர் 12 ஆம் திகதியே வளிமண்டலவியல் திணைக்களம் புயல் உருவாகப்போவது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். புயல் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், கொத்மலை போன்ற முக்கிய நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை முன்கூட்டியே வெளியேற்றுதல் உள்ளிட்ட எவ்வித முன்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், கம்பளை போன்ற பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைக் குறைத்திருக்க முடியும் என்றும், உயிர்ச்சேதம் மற்றும் சொத்துச் சேதங்களை பெருமளவு தவிர்த்திருக்க முடியும் என்றும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் தலைவராகப் பணியாற்றுவதாகவும், பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அமைச்சரவையினர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர் என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

கண்டி நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகில் அமைந்திருந்த தனது சட்ட அலுவலகம், புயலால் ஏற்பட்ட வெள்ளத்தினால் முற்றாகச் சேதமடைந்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தனது தொழில்முறை கடமைகளை நிறைவேற்றுவதற்கு அவசியமான கணினித் தரவுத்தளம் முழுமையாக அழிந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனர்த்த முகாமைத்துவம் மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை விவகாரங்களில் பிரதிவாதிகளின் செயற்பாடுகள், அக்கறையற்ற தன்மை மற்றும் கடமையின்மை ஆகியவற்றை வெளிப்படுத்துவதாகவும், இது சட்டபூர்வமான மற்றும் அரசியலமைப்பு ரீதியான கடமைகளின் மீறல் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரியவுடன் சட்டத்தரணிகளான நிசல் பெர்னாண்டோ, கல்பனி திசாநாயக்க மற்றும் ஹேஷானி பொன்சேகா ஆகியோர் முன்னிலையாகினர்.