டித்வா புயலால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கப்பட்டன டித்வா புயலால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் ஏற்பாட்டிலும், நோர்த் சீ லிமிடெட் (Nort…
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கப்பட்டன
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் ஏற்பாட்டிலும், நோர்த் சீ லிமிடெட் (North sea Ltd.) நிறுவனத்தின் அனுசரணையிலும், சேதமடைந்த மீன்பிடி உபகரணங்களுக்கு மாற்றீடாக புதிய வலைகள் மற்றும் படகுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (14.07.2026) முற்பகல் 11.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள வளாகத்தில் நடைபெற்றது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட உதவிப் பணிப்பாளர் வி. கலிஸ்ரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாணம்–கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பயனாளி மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகளை வழங்கி வைத்தார். டித்வா புயலினால் படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை இழந்த மீனவர்களின் தொழிலை மீண்டும் ஆரம்பிக்க உதவும் வகையில், இந்நிகழ்வின் மூலம் 73 மீனவர்களுக்கு புதிய மீன்பிடி வலைகளும், 02 மீனவர்களுக்கு புதிய படகுகளும் வழங்கப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்ட ஏனைய மீனவர்களுக்கும் கட்டம் கட்டமாக உதவிகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினருடன், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சரின் இணைப்பாளரும் கிளிநொச்சி மாவட்ட தூய்மை இலங்கை செயலணி இணைப்பாளருமான மருங்கன் மோகன், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகள், கடற்றொழில் அமைச்சரின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் வல்லிபுரம் அற்புதராசா, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர் தேவநாயகம் சுஜீவன், பிரதேச சபை உறுப்பினர்கள், கடற்றொழில் சார் அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

